Goat market pt desk
தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகை: உளுந்தூர்பேட்டை வார சந்தையில் 3 மணி நேரத்தில் ரூ.5 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்!

உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி மூன்று மணி நேரத்தில் 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

webteam

செய்தியாளர்: ஆறுமுகம்

தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச் சந்தை நடப்பது வழக்கம். அப்படி இன்று நடைபெற்ற வாரச்சந்தையில், தியாகதுருவம், திருக்கோவிலூர், ஆசனூர், மடப்பட்டு, சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

Goat sales

இந்நிலையில், இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வருகின்ற 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆடுகளின் விற்பனை அமோகமாக இருந்தது.

காலை ஐந்து மணிக்கு தொடங்கி இந்த சந்தையில் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, பெங்களுார் ஐதராபாத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் வழக்கத்தைவிட அதிக விலைகொடுத்து ஆடுகளை வாங்கிக் குவித்தனர்.

இதில், வெள்ளாடு, செம்மறி ஆடு, குறும்பாடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூபாய் 8000 முதல் 25,000 வரை விற்பனையானது. கடந்த வாரம் வரை இந்தச் சந்தையில் 50 லட்சம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்ற நிலையில் பக்ரீத் பண்டிகையொட்டி இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், 3 மணி நேரத்திலேயே ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.