ஆடுகள் விற்பனை pt web
தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் ஆடுகள் விற்பனை அமோகம் - கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள வாரச் சந்தைகளில் ஆடு மற்றும் மாடுகள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

PT WEB

நமது செய்தியாளர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கேளூர் மாட்டு சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாடுகள் விற்பனை களைகட்டியது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வியாபாரிகள் கேளுர் மாட்டு சந்தைக்கு வந்திருந்தனர்.

ஆடுகள் விற்பனை அமோகம்

இந்நிலையில், காலை முதல் நடைபெற்ற மாட்டு சந்தையில் மாடுகள் விற்பனை ரூ.5 கோடியை தாண்டியது தனிப்பட்ட மாடுகள் 30 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விலை போனதால் விவசாயிகளும் மாடு வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல்:

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே, வீரகனூர் வாரச் சந்தையில் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனூர், தம்மம்பட்டி, சின்னசேலம், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகளும் வியாபாரிகளும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வழக்கத்தை விட கூடுதலான ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் ரூ 2.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

வாரச் சந்தை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வாரச்சந்தை:

கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை கூடும் ஆட்டு சந்தைக்கு திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும். இந்நிலையில், தீபாவளி பண்டிகைi முன்னிட்டு இந்த வாரம் சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடுகள் அதிக விலைக்குப் போனால் 2.5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

நாமக்கல் ஆட்டு சந்தை:

நாமக்கல்லில் இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் நாமக்கல் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என மொத்தம் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் வழக்கத்தை விட இறைச்சிக்காக அதிகளவு ஆடுகள் விற்பனையானது. இதில் ஆடு ஒன்று குறைந்தபட்சம் 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாய் வரை விலைபோன நிலையில், 1.50 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது.

வாரச் சந்தை

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காருவள்ளி ஆட்டு சந்தை:

இன்று கூடிய தீபாவளி சிறப்பு ஆட்டு சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். உள்ளூர் விவசாயிகளும் தங்களது வளர்ப்பு ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்நிலையில், வரும் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆடுகள் 8500 ரூபாய் துவங்கி 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. நாட்களில் நடைபெறும் சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். இந்த நிலையில், இரண்டு சந்தையிலும் மொத்தமாக 5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.