தமிழ்நாடு

வெள்ளை சுருள் ஈக்களால் அழிந்துபோன ஆயிரம் ஏக்கர் தென்னை மரங்கள் : விவசாயிகள் கவலை

வெள்ளை சுருள் ஈக்களால் அழிந்துபோன ஆயிரம் ஏக்கர் தென்னை மரங்கள் : விவசாயிகள் கவலை

webteam
விழுப்புரத்தில் வெள்ளை சுருள் ஈக்களால் தென்னை மரங்கள் பாதிப்படைந்ததால் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் மற்றும் வானூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1075 ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோடைக்காலம் என்பதால் தென்னை மரங்களுக்கு ரூகோஸ் என்று சொல்லக்கூடிய வெள்ளை சுருள் ஈ மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த ஈயானது தென்னை மரத்தின் இலைகளின் அடிப்பாகத்திலிருந்து தென்னை இலையில் உள்ள பச்சையத்தை உறிஞ்சுகிறது. இதனால் தென்னை இலையானது கருமை நிறத்தில் மாறுகிறது.

 

இந்த ஈ-யின் தாக்கம் தென்னை மரங்களில் ஒளிச்சேர்க்கையைத் தடுத்து மகரந்தச் சேர்க்கையைப் பாதிக்கின்றது. இதனால் தென்னை மரமானது சில நாட்களிலேயே இறந்து விடும் நிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில், விழுப்புரம் மாவட்ட வேளாண்மை திட்ட இணை இயக்குநர் கென்னடி ஈ-யின் தென்னை மரங்களை ஆய்வு செய்தார்.

பின்னர் ஈக்களின் தாகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மரக்காணம் மற்றும் வானூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆன்டிபயாடிக் கலந்த நீரைத் தயாரித்து, உயரழுத்த தெளிப்பான் மூலம் தெளித்தார். பாதிக்கப்பட்ட தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்குத் தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்படும் எனவும் மாவட்ட வேளாண்மை திட்ட இயக்குநர் தெரிவித்தார்.