மீஞ்சூரை சேர்ந்த சிறுமி பள்ளியை புறக்கணித்துவிட்டு நீதிமன்றத்திற்கு வந்தது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையிலும், சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் எனவும் 6 வயதான ஒன்றாம் வகுப்பு மாணவி அதிகை முத்தரசி என்ற சிறுமியும், அவரது தந்தையான வழக்கறிஞர் ஏ.இ.பாஸ்கரனும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில், கோவிலை ஒட்டி செயல்பட்டு வரும் பள்ளி வளாகம், பிச்சைக்காரர்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும், சட்டவிரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது என குறிப்பிட்டிருந்தனர். அத்துடன் சுகாதாரம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு பள்ளி மாணவ-மாணவியருக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் சூழ்நிலை இருப்பதால், பள்ளியை தூய்மைபடுத்தவும் வேண்டுமென்று அரசு அதிகாரியிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்காக நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த வழக்கிற்காக பார்வையாளர் பகுதியில் மனுதாரர் அதிகை முத்தரசி தனது தந்தையுடன் நீண்ட நேரமாக காத்திருந்தார். அந்த பெண்ணை நீண்ட நேரமாக கவனித்த நீதிபதிகள், அருகே அழைத்து பெண்ணின் வழக்கு குறித்து கேட்டனர். பள்ளிக்கு போகவில்லையா எனவும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சிறுமி நீதிமன்றத்திற்கு வருவதற்காக வகுப்புகளை புறக்கணித்து விட்டேன் என துடுக்காக பதிலளித்தார். சிறுமியின் சட்டென்ற பதிலால் ஆச்சரியமடைந்த நீதிபதிகள், பள்ளி செல்லாமல் எப்படி நன்றாக படிக்க முடியுமெனவும், இதுபோன்று வகுப்புகளை தவிர்க்கக் கூடாது என அறிவுறுத்தினர்.
பின்னர் அந்த மாணவி பயிலும் பள்ளி குறித்து அரசு தாக்கல் செய்த அறிக்கையில், வழக்கில் குறிப்பிட்ட பெரும்பாலான குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் குறைகள் முழுமையாக சரிசெய்யபடவில்லை என வழக்கறிஞரான அதிகை முத்தரசியின் தந்தை பாஸ்கரன் தெரிவித்தார்.
அவற்றை பதிவு செய்த நீதிபதிகள், குழந்தை தொடர்ந்துள்ள வழக்கை ஈகோ அடிப்படையில் கருதாமல், குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர், மேலும், நிதி பற்றாக்குறை என்றால் வணிக நிறுவனங்களின் சமூக பொறுப்பின் அடிப்படையில் நிதியை ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்தனர்.