தமிழ்நாடு

ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது..!

ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது..!

Rasus

ஹெச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாடு செல்வதற்காக உடல் பரிசோதனை செய்தபோது ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் 2 வாரங்களுக்கு முன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் ரத்த தானம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்ற பட்டியலை எடுத்து பார்த்தபோது, சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபோது அவரும் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்றுடன் கூடிய ரத்தம் செலுத்தப்பட்டு, அவருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தனி அறையில் வைத்து அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 45 நாட்களுக்கு பிறகே அக்குழந்தைக்கு சோதனை மூலம் ஹெச்ஐவி தொற்று இல்லையா..? இருக்கிறதா..? என்பது தெரியவரும். முன்னதாக தனது உடலில் ஹெச்ஐவி தொற்று இருப்பது தெரியாமல் ரத்தம் கொடுத்த சிவகாசி இளைஞர் மனவேதனையால் தற்கொலை செய்து கொண்டார்.