கண்ணின் கருவிழியை நம் விருப்பமானவர்களுக்கு பரிசாக அளிக்கும் புதிய யுக்தி இளைஞர்களிடையே தற்போது வரவேற்பை பெற்றுள்ளது. கருவிழியில் நிழற்படமா? ஆச்சரியத்தை ஏற்படுத்தி வரும் புதிய அறிமுகம் குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
மாறி வரும் காலச்சூழலில் வழக்கமான புகைப்பட பிரேம்கள் போன்ற பரிசுப்பொருட்களை தற்போது இளைஞர்கள் விரும்புவது இல்லை. அதனால், கைரேகைகளை பரிசாக கொடுப்பது, ஒளி பொருந்திய மின்விளக்குகளில் புகைப்படங்கள் இடம் பெற பரிசளிப்பது, இணைந்த கைகள் உள்ளிட்ட மோல்டிங் பரிசளிப்பது என பல்வேறு விதமான பரிசுகள் சந்தைகளில் வரவேற்பை பெற்றுள்ளன.
அப்படி கண்ணின் கருவிழியை படம் பிடித்து பரிசளிப்பது பிரபலமாகி வருகிறது. நமது கண்ணின் கருவிழியை துல்லியமாக படம் பிடித்து கருவிழியை மட்டும் வடிவமைப்பு செய்து பல்வேறு வடிவங்களில் புகைப்படங்களாக மாற்றுவதே இந்த முறையாகும்.
திருச்சியில் நடைபெற்ற இந்தக் கண் கருவிழி புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள், குடும்பத்தினர் பங்கேற்று தங்களது கண்ணின் கருவிழியை புகைப்படமாக மாற்ற ஆர்வம் காட்டினர்.
நிலைப்பலகை போன்று அமைக்கப்பட்டுள்ள இடத்தில் தங்களது முகத்தை வைக்கும் பொழுது, எதிரில் உள்ள கேமரா மூலம், ஒளியின் உதவியுடன் துல்லியமாக கண்ணின் கருவிழியை தெளிவாக படம் பிடித்து, கருவிழியை மட்டும் எடிட்டிங் முறையில் வடிவமைத்து அதனை புகைப்படமாக்குவதே இந்த முறையாகும்.
காதலர்கள் கருவிழி, குடும்பத்தினரின் கருவிழி என விருப்பத்திற்கு ஏற்ப துள்ளியமாக எடுத்துக்கொடுக்கப்படுகிறது. ஆயிரம் ரூபாய் தொடங்கி 10,000 ரூபாய் வரை இந்த நிழல் படங்கள் செய்து தரப்படுகிறது. காலத்திற்கு ஏற்ப இது போன்ற வரவுகள் என்பது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்லலாம்