தமிழ்நாடு

கொடைக்கானல் அடுக்கம் சாலையில் உருண்டு விழுந்த ராட்சத பாறை: போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் அடுக்கம் சாலையில் உருண்டு விழுந்த ராட்சத பாறை: போக்குவரத்து பாதிப்பு

kaleelrahman

பெருமழைக் காலங்களில் கொடைக்கானல் அடுக்கம் சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள அடுக்கம் கிராமம் வழியாக, தேனி மாவட்டத்தின் பெரியகுளம் நகருக்கு புதிய நெடுஞ்சாலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அச்சாலை போட்பட்ட நாளில் இருந்தே, பெருமழைக் காலங்களில் நிலச்சரிவு, பாறை உருண்டு விழுதல் உள்ளிட்ட பல இடர்பாடுகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், தென்மேற்கு பருவ மழையின்போது 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையில் மண்சரிந்ததோடு, சாலை முற்றிலும் பெயர்ந்தும் பெரும் இடர்பாட்டை சந்தித்தது. அதனையடுத்த பெயர்ந்த சாலையில் பயணித்த சுற்றுலா வானகம் 200 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்து மூன்று உயிர் பலிகள் ஏற்பட்டன.

இதைத் தொடர்ந்து, சுதாரித்துக் கொண்ட மாவட்ட நிர்வாகம் அடுக்கம் சாலையை அப்பகுதி கிராம மக்கள் தவிர்த்து, சுற்றுலா பயணிகள் பயன்படுத்த தடைவிதித்து. இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் பெய்த கன மழைக்கு, ராட்சத பாறை ஒன்று அடுக்கம் கிராமத்தைத் தாண்டி பெரியகுளம் செல்லும் சாலையில் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

இதனால் அடுக்கம், சாமக்காட்டு பள்ளம்,பாலமலை உள்ளிட்ட சில கிராம மக்கள் தோட்டங்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் பாறையை வெடி வைத்து தகர்த்து, சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.