பள்ளியில் ஒன்றாகப் பயின்றவர்கள் நீண்ட நெடிய காலத்திற்குப் பின் சந்தித்து பழைய நினைவுகளில் மூழ்குவது பற்றிய செய்திகளை அனைவரும் கடந்து வந்திருப்போம். அதுபோன்ற ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு சென்னையில் நேற்று நடைபெற்றது.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில் 1966 - 1967 ஆண்டு பதினொன்றாம் வகுப்பு படித்த மாணவர்கள் மற்றும் அந்த வகுப்பு ஆசிரியர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டனர். அந்த சந்திப்பின்போது ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியை பரிமாறிகொண்டும், பழைய நினைவுகளை நினைத்துக்கொண்டும் மாணவர்களாகவே மாறினார். அந்த ஒருநாள் மாணவராக மாறியவருள் மு.க.அழகிரியும் ஒருவர். தன்னுடன் படித்த நண்பர்களை பார்த்தவுடன், மு.க.அழகிரி தன்னையே மறந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார்.
மு.க.அழகிரியை உரிமையுடன் ஒருமையில் அழைத்த நண்பர்களையும் இந்த நிகழ்வில் காண முடிந்தது. அழகிரிக்கு தமிழ் கற்பித்த ஆசிரியப் பெருமக்களும் இதில் பங்கேற்று, அந்த நாட்களை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். மு.க. அழகிரி, தனது பள்ளிக்காலத் தோழர்களுடன் மனம்விட்டு பேசி சிரித்தைக் காண மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தது என அவரது துணைவியார் கூறியுள்ளார்.
50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நடைபெற்றது மிகவும் சந்தோஷமாக இருந்ததாகவும், இந்த சந்திப்பு தொடர்ந்து நடைபெறவேண்டும் எனவும் நிகழ்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனார். இந்த சந்திப்பில் அப்போதைய ஆசிரியர்கள் ஜெயபால், நாராயணன், ஜோசப், லெட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆரோக்கியமான இந்த சந்திப்பில் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.