N.ஆனந்த், விஜய் pt web
தமிழ்நாடு

“யாரென்ன சொன்னாலென்ன? என்னுடன்தான் இருப்பார்” உறுதியாக நிற்கும் விஜய்.. யார் இந்த N.ஆனந்த்?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி நிகழ்வுகளாக இருக்கட்டும், மாநாட்டுக்கு அனுமதி பெறுவதாக இருக்கட்டும் எல்லா வேலைகளையும் ஓடி ஓடி செய்துகொண்டிருப்பவர் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான N.ஆனந்த் தான்.

இரா.செந்தில் கரிகாலன்

யார் இந்த N.ஆனந்த்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி நிகழ்வுகளாக இருக்கட்டும், மாநாட்டுக்கு அனுமதி பெறுவதாக இருக்கட்டும் எல்லா வேலைகளையும் ஓடி ஓடி செய்துகொண்டிருப்பவர் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான N.ஆனந்த் தான்.

“மாநாடு குறித்த தேதியை தளபதி அறிவிப்பார்.., மாநாட்டில் யார் கலந்து கொள்வார்கள் என்பதை தளபதி அறிவிப்பார்” என பத்திரிகையாளர்கள் என்ன கேள்வி கேட்டாலும், அதை விஜய் அறிவிப்பார் எனக் கூறும் ஆனந்துக்கு அதுகுறித்தெல்லாம் தெரியாது என்றில்லை. தான் ஒரு கருத்துத் தெரிவித்து அது தன் தலைவர் விஜய்க்கும், கட்சியின் நிகழ்வுகளுக்கும் எந்தவிதத்திலும் பாதிப்பாக வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் N.ஆனந்த். அப்படி விஜய்க்காக ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருப்பவரும் அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கக்கூடியருமான N.ஆனந்த் யார்.., அவரின் பின்னணி என்ன?

விஜய், N.ஆனந்த்

புதுச்சேரிதான் N.ஆனந்த்தின் சொந்த ஊர். புதுச்சேரியின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான அஷ்ரப்பின் உதவியாளர், ரியல் எஸ்டேட் அதிபர் உள்ளிட்டவைதான் அவரின் அடையாளம். காங்கிரஸ் கட்சியில் பயணித்துவந்த N.ஆனந்த்க்கு, 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில், எம்.எல்.ஏ ஆசை பிறக்கிறது.

தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள புஸ்ஸி என்கிற தொகுதியைக் குறிவைத்து களப்பணியில் இறங்குகிறார். சார்லஸ் ஜோசப் பாடிசியர் டி புஸ்ஸி என்பவர் பிரெஞ்ச் காலனியாட்சியின்போது பாண்டிச்சேரியின் கவர்னராக இருந்தார். அவரின் நினைவாக இந்தப் பெயர் தொகுதிக்கு சூட்டப்பட்டிருக்கிறது.

படிப்படியாக உயர்ந்த N.ஆனந்த்

மீனவ மக்கள், இஸ்லாமியர் நிறைந்த அந்தத் தொகுதியில் நடிகர் விஜய்க்கென தனி ரசிகர் பட்டாளமுண்டு. அவர்கள் வழியாக அந்தத் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்கிறார் N.ஆனந்த். இவரின் அணுகுமுறையைக் கண்ட, அந்தப்பகுதி விஜய் ரசிகர்கள் இவரை மன்றத்தின் கௌரவத் தலைவராக்கி அழகு பார்க்கின்றனர். அந்த அடையாளத்தின் மூலமாகவும், விஜய் ரசிகர் மன்றத்துக்கு செய்துவரும் உதவிகளின் வழியாகவும் விஜய், மற்றும் அவரின் தந்தை எஸ்.ஏசியின் அறிமுகம் ஆனந்துக்குக் கிடைக்கிறது. அதேவேளை, 1997-ம் ஆண்டிலிருந்தே விஜய் மன்றத்தில் இருப்பதாக ஒரு நேர்காணலில் பதிவு செய்திருக்கிறார் N.ஆனந்த்.

N.ஆனந்த்

இது ஒருபுறமிருக்க, 2005-ம் ஆண்டு, புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான கண்ணன், அப்போது முதல்வராக இருந்த ரங்கசாமிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி கட்சியை விட்டு நீக்கப்படுகிறார். தொடர்ந்து, புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்கிற கட்சியையும் அவர் தொடங்குகிறார். அந்தக் கட்சியில் இணைந்த N.ஆனந்த், 2006 தேர்தலில் புஸ்ஸி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்போதிருந்துஅவர் `புஸ்ஸி ஆனந்த்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

மக்கள் பிரதிநிதி என்பதால் அவருக்கு புதுச்சேரி மாநில விஜய் மன்றத்தின் பொறுப்பு கிடைக்கிறது. தொடர்ந்து அவருடைய செயல்பாடுகளால், ஒட்டுமொத்த மன்றங்களின் பொறுப்பாளராகிறார் N.ஆனந்த். தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார் N.ஆனந்த்.

உழைப்பிற்கான நற்சான்று

அரசியல் கட்சிகளுக்கு இணையாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டம், தொகுதி, நகரம், வட்டம், கிளை என கட்டமைப்பையும் மகளிர் அணி, இளைஞர் அணி, வர்த்தக அணி, மீனவரணி என நிர்வாக அமைப்பையும் கொண்டிருந்தது விஜய் மக்கள் இயக்கம்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களிலும் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலும் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வந்தது. அத்தனை மன்றங்களையும் N.ஆனந்த்தான் நிர்வகித்து வந்தார். அந்த அடிப்படையில்தான் கட்சிக் கட்டமைப்பாக அவை மாற்றப்பட்டபிறகும், ஆனந்தே பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டார்..,

விஜய் மக்கள் இயக்கம் சார்பாகத் தொடங்கப்பட்ட, விலையில்லா விருந்தகம், விலையில்லா மருந்தகம், நடிகர் விஜய் பயிலகம் என அனைத்திலும் ஆனந்தின் பங்கு மிக முக்கியமானது. தவிர, மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் அனைத்தையும் N.ஆனந்த்தான் ஒழுங்குபடுத்தி வந்தார்... தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்வுகளையும் அவர்தான் ஒருங்கிணைத்து வருகிறார்..

கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட்ட நாளன்று, கொடிப்பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது.. அப்போது N.ஆனந்த்தை நோக்கி, விஜய்யின் அம்மா ’சூப்பர்’ என சைகை செய்தது அனைத்து கேமிராக்களிலும் பதிவானது. அது ஒன்றே N.ஆனந்தின் உழைப்பு எத்தைகையது என்பதற்கான நற்சான்றாக நாம் எடுத்துக்கொள்ளலாம்..,

எளிய அணுகுமுறையும், களத்தில் இறங்கி வேலை செய்வதுமே ஆனந்தின் அடையாளம் என்கிறார்கள் தமிழக வெற்றிக் கழகத்தினர். விஜய் தந்தை எஸ்.ஏசி, முன்னாள் மக்கள் இயக்க நிர்வாகிகள் என பலரின் விமர்சனங்களையும் மீறி, விஜய் அவரைப் பக்கத்தில் வைத்துக் கொள்வதற்கு, விஜய்யின் வார்த்தையை மீறி அவர் எந்தச் செயலையும் செய்யமாட்டார் என்பதையும் தாண்டி, விஜய்யின் மனவோட்டத்தைப் புரிந்து செயல்படுபவர் என்பதையே காரணமாகச் சொல்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்..