முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்கு இதுபோன்ற நிலை வந்ததற்கு காரணமே டெல்லி தான் என்றும், தற்போதுள்ள நிலைமையை பார்த்தால் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருக்குமே இரட்டை இலை சின்னம் கிடைக்காதது போல் தான் உள்ளது எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அ.ம.மு.க. சார்பில் நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகள் தின பொதுக்கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வருகை தந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டியில் அவர் தங்கி இருந்த விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்கு இது போன்ற நிலை வந்ததற்கு காரணமே டெல்லி தான், டெல்லியில் உள்ளவர்கள் நினைத்தால் தான் இவர்களை ஒன்றிணைக்க முடியும். நீதிமன்றத்தில் பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் பதவி சண்டை போட்டுக்கொண்டு சுயநலத்திற்காக சென்ற நிலையில், தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
வழக்கை மையமாகக் கொண்டு, கடந்த 2017-ல் நான் வேட்பாளராக போட்டியிடும் பொழுது இரட்டை இலை சின்னத்திற்கு தடை கொடுத்ததைப்போல் தற்போதும் இரட்டை இலை சின்னத்திற்கு தடை விதிக்க வாய்ப்புகள் உள்ளன. வருகின்ற 27-ம் தேதி அ.ம.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துப்பேசி ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.
ஒரு கட்சி பலவீனமானதை வைத்து ஒரு கட்சி வளர முடியாது, மக்கள் நினைத்தால் தான் வளர முடியும். பாஜக வளர்ந்து இருக்கா என்பது காலம்தான் பதில் சொல்லும். முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி செய்த தவறால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. கடந்த 20 மாத காலத்தில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், அதற்கு எதிர்மறையாக செயல்படுகின்றனர்.
ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள், அதனால் திமுக என்னதான் கூட்டணியில் இருந்தாலும், நாங்கள் மக்களை சந்தித்து இதனை எடுத்துரைத்து வாக்குகள் கேட்டு திமுகவை தோல்வியுறச் செய்ய முயற்சிப்போம்,
1998, 2004 உள்ளிட்ட தேர்தல்களில் அ.தி.மு.க., பா.ஜ.க. உடன் ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் கூட்டணி வைத்தார்கள். 2014-ல் பா.ஜ.க.வை எதிர்த்து தேர்தலை சந்தித்தார், தற்போது ஜெயலலிதாவோ, தலைவரோ இல்லை, அதனால் அவர்கள் கமலாலயம் செல்வதை நாம் விமர்சனம் செய்ய முடியாது. பால்வளத்துறை அமைச்சர் நாசரின் செயல்பாடு தான் திராவிட மாடல். அவர் செயல்பாட்டில் இருந்து எந்த அளவு திமுகவினர் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது, காலத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பதில் சொல்வார்கள்.
திராவிட மாடல், திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு மக்களை தொடர்ந்து ஏமாற்றி வந்தால், மக்கள் கிளர்ந்து எழுந்து அதற்கு மாற்றாக தான் அவர்கள் இருப்பார்கள், அதனால் தேசியக் கட்சியோ அல்லது மாநிலக் கட்சியாக கூட இருக்கலாம், யார் தவறு செய்தாலும் மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் தருவார்கள்.
தற்போதைய நிலைமையை வைத்து பார்த்தால், ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருக்குமே இரட்டை இலை சின்னம் கிடைக்காதது என்பது போல் தான் இருக்கிறது. தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார். பா.ஜ.க. அழைத்தால் ஒன்றிணைய செல்வீர்களா என்ற கேள்விக்கு, ‘ஒருவேளை என்னை அழைத்தால், அப்போது நான் பேசிக் கொள்கிறேன்’ என்று டிடிவி தினகரன் கூறினார்.