சீமான் ட்விட்டர்
தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் அண்ணாமலையை முன்னிறுத்திதான் பாஜக தேர்தலை சந்திக்கிறது” – சீமான் பேச்சு

“10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்துவிட்டு, கச்சத்தீவு பிரச்னையை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிந்து கொண்டேன் என்று சொல்வது கேவலம்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

webteam

செய்தியாளர்: ஜி.பழனிவேல்

கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் வித்யா ராணியை (வீரப்பனின் மகள்) ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்...

‘கச்சத்தீவு பிரச்னையை RTI-யில் அறிவதா?’

“கச்சத்தீவு பிரச்னையை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிந்து கொண்டேன் என்று ஒரு நாட்டின் எல்லா உரிமைகளையும் கையில் வைத்துக் கொண்டிருந்த ஒரு தலைவன் (மோடியை குறிப்பிட்டு) பேசுவது கேவலம். தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது எளிய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட ஒன்று. அதில் கச்சத்தீவை பற்றி தெரிந்து கொண்டேன் என்று சொல்வது ஏற்புடையதல்ல.

katchatheevu issue

குஜராத் கலவரம், மணிப்பூரில் நடந்த கலவரம் ஆகியவற்றை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டால் பதில்கூட வராது. அதேநேரம் கச்சத்தீவு பிரச்னை பற்றி மட்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உடனே வழங்கப்படுகிறது. ஏனென்றால் இதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்றுக் கொடுத்தார் என கூறுகின்றனர். காரணம் அண்ணாமலையை முன்னிறுத்திதான் அவர்கள் தமிழ்நாட்டில் தேர்தலை சந்திக்கின்றனர்.

‘பிரசாரத்துக்கு 20 நாட்கள், வாக்கு எண்ண 44 நாட்களா?’

தேர்தலுக்கு வெறும் 20 நாட்கள் அவகாசம், ஆனால், வாக்கு எண்ணிக்கைக்கு 44 நாட்கள் அவகாசம். கொழுத்த பணம் மற்றும் அதிகார கட்டமைப்பு உள்ளவரால் மட்டுமே இதை செய்ய முடியும்,

காங்., பாஜக-வை நம்பி அவர்களது கூட்டணியை நம்பி ஏமாறாதீர்கள். அவர்களால் நமக்கு எந்தப்பயனும் இல்லை. இது குறித்து நான் பேசினால் என் மீது, 136 வழக்கு, சின்னம் பறிப்பு இவைதான் அரங்கேறுகின்றன. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் நெஞ்சை நிமிர்த்தி நாம், 40 தொகுதிகளிலும் களம் காண்கிறோம்.

‘காட்டிற்குள் வீரப்பன் இருந்திருந்தால்...’

காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என கர்நாடகாவில் கூறுகிறார்கள். தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க நாங்கள் என்ன முட்டாள்களாக என கேட்கின்றனர். ஒரு நொடி நினைத்துப் பாருங்கள், காட்டிற்குள் வீரப்பன் இருந்திருந்தால், காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க முடியாது என கூற முடியுமா.

காங்., கட்சியால்தான் நம் தமிழனமே அழிந்தது. அவர்கள் தற்போது நம்மிடம் ஓட்டு கேட்கின்றனர். அதை பா.ஜ.க அரசிடம் கேளுங்கள் நியாயம் கிடைக்குமா என பார்ப்போம். தற்போது பா.ஜ.க கச்சத்தீவை பற்றி பேசுகிறது. அதைபற்றி பேச வேண்டியவர்கள் நாம். எனவே தமிழினம் செழிக்க நம் குரல் லோக்சபாவில் ஒலிக்கவேண்டும். அதற்கு நம் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.