எடப்பாடி பழனிசாமி ட்விட்டர்
தமிழ்நாடு

“சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலால்தான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்தது” - இபிஎஸ் விளக்கம்

ஓட்டு போட்ட மக்களுக்கு விசுவாசமாக இருக்கவே பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

webteam

செய்தியாளர்: எழில் கிருஷ்ணா

திருவள்ளூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்ல தம்பியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருவள்ளுரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நேற்று பங்கேற்றார். அங்கு பேசிய அவர்,

"அதிமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. அதனால் தொடர்ந்து அதிமுகவை ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். அதிமுக கூட்டணியில் உள்ளவர்கள் உழைப்பாளர்கள், விசுவாசிகள். ஆனால், திமுக, காங்கிரஸ் கட்சி பணக்கார கட்சி. அதிமுக கூட்டணி சாதாரண தொண்டர்கள் நிறைந்த கட்சி.

எடப்பாடி பழனிசாமி

“அதிமுக கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்கு அடிபணியாது”

I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்றால் நிறைய திட்டங்களை கொண்டு வருவேன் என ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. 14 ஆண்டுகள் தமிழக மக்களுக்கு என்ன செய்தீர்கள்?மத்தியிலும், மாநிலத்திலும் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. அதிமுக கூட்டணி, ஆட்சி அதிகாரத்திற்கு அடிபணியாது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேசிய அளவில் மட்டுமே உள்ளன. மாநில அளவில் அல்ல. ஓட்டுப் போட்ட மக்களுக்கு விசுவாசமாக இருக்கவே பாஜக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியே வந்தோம்.

“3 ஆண்டு திமுக ஆட்சியில் என்ன திட்டங்களை கொண்டு வந்தீர்கள்”

திமுகவில், 5 ஆண்டுகளில் 38 எம்பிகள் பெஞ்ச்சை தேய்ச்சதுதான் மிச்சம். உங்களால் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்க முடிந்ததா? நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகவும், காங்கிரஸ் கட்சியும்தான். இப்போது நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூறி இரட்டை வேடம் போடுகிறது.

பொய் பேச நோபல் பரிசு ஸ்டாலினுக்கு தரலாம். அதிமுகவுக்கு மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை. 3 ஆண்டு திமுக ஆட்சியில் என்ன திட்டங்களை கொண்டு வந்தீர்கள்? எவ்வளவு நாட்கள் பொய் பேசுவீர்கள்? அதற்கெல்லாம் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

“சேலம் மாவட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது திமுக”

shooting

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை பற்றி ஸ்டாலின் பேசுகிறார். சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலால்தான் துப்பாக்கி சூடு நடந்தது. சேலம் மாவட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது திமுக ஆட்சியில்தான். அப்போது உயிரிழந்த குடும்பங்களுக்கு ₹5 லட்சம் ஜெயலலிதா வழங்கினார். மாஞ்சோலையில் தடியடி நடத்தியதும் திமுக ஆட்சியில்தான். அப்போது 18 பேர் உயிரிழந்தனர்.

நிலைமை இப்படியிருக்க, தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து பரப்பினால் தேர்தலில் நீங்கள் தோல்விதான் அடைவீர்கள். தூத்துக்குடி மக்களின் கருத்தை கேட்டு ஆலையை மூடியது அதிமுக ஆட்சியில்தான். ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட பொய் பரப்புரை செய்து வருகிறார்” என்றார்.