EPS with Candidate pt desk
தமிழ்நாடு

“தம்பி, ஆணவத்தோடு பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” - அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி

“தம்பி, தெய்வத்தால் தொடங்கப்பட்ட கட்சி அதிமுக.. உங்க பாட்டனையே பார்த்தவர்கள் நாங்கள்; ஆணவத்தோடு பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என சேலத்தில் நடைபெற்ற அதிமுக பரப்புரை பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அண்ணாமலையை கடுமையாக சாடினார்.

webteam

செய்தியாளர்: மோகன்ராஜ்

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வாக்கு சேகரித்தாார்.

அப்போது பேசிய அவர்...

“மக்களுக்காக உழைக்கிற இயக்கம் அதிமுக”

“சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. எல்லா தேர்தல்களிலும் சேலத்தில் அதிமுக வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. 2021-ல் 10 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக தொண்டர்கள் உழைக்க பிறந்தவர்கள். அவர்கள் உழைப்பால்தான் அதிமுக ஏற்றம் பெற்றிருக்கிறது. மக்களுக்காக உழைக்கிற இயக்கம் அதிமுக. மக்களின் நம்பிக்கையை பெற்ற அதிமுக அரசு, மக்களுக்காக நிறைய திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அதிமுக அரசின் நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது.

EPS

“திமுகவை போல அதிமுக எம்.பிக்கள் கோழைகள் இல்லை”

மோடியை கண்டு எங்களுக்கு பயம் என பொய்யை பரப்புகிறார்கள். கள்ள உறவு, கள்ளக் கூட்டணி என்பது திமுகவுக்குதான் பொருந்தும். அப்பாவுக்கும் மகனுக்கும் இந்த வார்த்தைகள் தெரியும் பொருந்தும். ஒரு கூட்டணியில் இருந்து வெளியே வந்தபிறகு அதுபற்றி பேசுவது சரியல்ல.

அதிமுகவை பொறுத்தவரை தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். திமுகவை போல அதிமுக எம்.பிக்கள் கோழைகள் இல்லை. ஓட்டு போட்ட மக்களுக்கு விசுவாசமானவர்கள் அதிமுக எம்.பிக்கள். ஒற்றை செங்கலை ஊர் ஊராக சென்று காட்டுகிறார் உதயநிதி. நாடாளுமன்றத்தில் காட்டினால்தானே வேலை நடக்கும். 5 ஆண்டுகாலம் திமுக எம்பிக்கள் பெஞ்சு தேய்த்தார்களா? நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருந்தால் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்திருக்கும். இதுவே அதிமுக எம்பிக்கள் இருந்திருந்தால் செய்திருப்பார்கள்.

“அதிமுக தெய்வத்தால் உருவாக்கப்பட்ட கட்சி. ஆணவத்தால் பேசக்கூடாது”

இன்னொருத்தர் புதிதாக வந்துள்ளார். இவர் அதிமுகவை ஒழிக்கிறேன் என்கிறார். அதிமுக தெய்வத்தால் உருவாக்கப்பட்ட கட்சி. ஆணவத்தால் பேசக்கூடாது. அதிமுக இல்லையென்றால் தமிழகம் வளர்ச்சி பெற்றிருக்காது. அதிமுக 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்ததால்தான் மக்கள் நல்ல திட்டங்களை பெற்றனர். 1998-ல் ஊர் ஊராக தாமரை சின்னத்தை கொண்டு சேர்த்தது அதிமுகதான். நீங்கள் எல்லாம் நியமனம் செய்யப்பட்டவர்கள். உங்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். டெல்லியில் இருப்பவர்கள் நினைத்தால்தான் நீங்கள் தலைவராக இருக்க முடியும். கொஞ்சம் ஜாக்கிரதையாக பேசுங்கள்.

Annamalai

ஒரு கவுன்சிலராக முடியவில்லை. நீங்கள் வந்து அதிமுகவை ஒழிக்க முடியுமா?

அதிமுக ஒரு மாதிரியான கட்சி. பார்த்து பேசுங்க. 500 நாளில் 100 திட்டங்களை செயல்படுத்துவேன் என்று அறிக்கை விடுகிறார். 2021-ல் திமுக ஏமாற்றியது போல, தற்போது அண்ணாமலை புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார். ஒரு கவுன்சிலராக முடியவில்லை. நீங்கள் வந்து அதிமுகவை ஒழிக்க முடியுமா? பதவி வரும் போது பணிவு வர வேண்டும். அது உங்களிடம் இல்லை. தலை கர்வத்தில் ஆடக் கூடாது. மரியாதை கொடுத்தால்தான் மனிதராக பிறந்தவருக்கு மரியாதை.

“நான் முதலமைச்சராக இருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசாணை வெளியிடப்பட்டது”

வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்கிறார் பிரதமர் மோடி. அவருடைய கூட்டணியில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாரிசு அரசியல் படி வந்தவர்தான். அதிமுகவை பொறுத்தவரை வாரிசு அரசியலை நிச்சயம் இந்தத் தேர்தலில் ஒழிப்போம். 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் கட்சி அதிமுக. கூட்டணி வைத்த பிறகு இட ஒதுக்கீடு குறித்து கெஞ்சி கேட்டதாக அன்புமணி கூறுகிறார்.

Ramadoss, PM Modi

நான் முதலமைச்சராக இருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசாணை வெளியிடப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என்று கூறும் பாஜகவுடன் சேர்ந்துள்ளார் அவர்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.