தமிழ்நாடு

“என்னுடைய வளர்ச்சி பாஜகவில் உள்ள சிலருக்கு பிடிக்கவில்லை” - காயத்ரி ரகுராம் பேட்டி

“என்னுடைய வளர்ச்சி பாஜகவில் உள்ள சிலருக்கு பிடிக்கவில்லை” - காயத்ரி ரகுராம் பேட்டி

webteam

மதுபோதையில் தாம் வாகனம் ஓட்டவில்லை என மறுத்துள்ள நடிகையும், நடன இயக்குநருமான காயத்திரி ரகுராம், தனது வளர்ச்சி சிலருக்குப் பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார். 

சென்னை அடையாறு திருவிக மேம்பாலம் அருகில் வாகனச்சோதனை நடைபெற்றதாகவும், அப்போது அவ்வழியாக வந்த நடிகை காயத்ரி ரகுராமின் கார் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. அப்போது காரில் இருந்து கீழே இறங்காமல் தன்னை அங்கிருந்து போகவிடும்படி போலீசாரிடம் காயத்ரி ரகுராம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அவர் மதுபோதையில் இருந்ததால் அவரிடம் போலீசார் ரூ. 3,500 அபராதம் வசூலித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

மேலும் காயத்ரி ரகுராம் உச்சகட்ட போதையில் இருந்ததால் அவரை கார் ஓட்ட போலீசார் அனுமதி மறுத்து போலீசாரே அவரது காரை ஓட்டிச்சென்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அவரை கொண்டு போய் பத்திரமாக விட்டு விட்டு வந்ததாகவும் கூறப்பட்டது. 

இந்த செய்திகள் வெளியானதை அடுத்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு பதிவுகள் மூலம் விளக்கம் கொடுத்தார். தான் குடிபோதையில் இல்லை என்றும், வழக்கமான சோதனைகளையே போக்குவரத்து காவலர்கள் அதில் கூறியிருந்தார். மேலும், காரை நான் தான் ஓட்டிச்சென்றேன். நான் குடிபோதையில் இருந்திருந்தால் காரை ஓட்ட போலீசார் எப்படி என்னை அனுமதித்திருப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் இது போன்ற கட்டுக்கதைகளை நிறுத்துங்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, “நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இல்லை; வேண்டுமென்றால் டெல்லியில் புகார் சொல்லலாம். பிக்பாஸில் பங்கேற்பதற்காக கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் தெரிவித்தார்; அன்றே விலகிவிட்டார்”  என்று கூறினார்.

பாஜகவில் இல்லை என தமிழிசை கூறியதை அடுத்து, அவருக்கு பதில் அளிக்கும் வகையில் காயத்ரி ரகுராம் தமது ட்விட்டரில், “டியர் தமிழிசை மேடம், நான் பாஜனதாவின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது ஒரு கணினி மூலமாக. உங்கள் விருப்பப்படி யாரையும் கட்சியில் சேர்க்கவோ விலக்கவோ முடியாது. இது ஒரு பிராந்திய கட்சி அல்ல. தமிழக பாஜகவின் யுவ மோர்சா செயல்வீரர்களும் தலைவர்களும் பெண்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் பெண்களை மிரட்டுகின்றனர். அவர்களை யாரும் கேள்வியே கேட்கக்கூடாதா?” என்றார்.

மேலும், “நான் இங்கிருப்பது நரேந்திர மோடிக்காகவே தவிர உள்ளூர் முகங்களுக்காக அல்ல. உங்கள் கட்சியிலிருந்து உறுப்பினர்களை விரட்டுவதை விட்டுவிட்டு ஆள் சேர்க்கப் பாருங்கள். உங்களுக்கு யாரை சேர்க்க வேண்டும் நீக்க வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் இல்லை. நீங்கள் தமிழக பாஜகவின் தலைவர் மட்டும்தான். நீங்களே எல்லா எதிர்காலத்தையும் நிர்ணயித்துவிட முடியாது” என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை தமது ட்விட்டரில் காயத்ரி ரகுராம் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து புதிய தலைமுறை நடத்திய சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் விரிவான பதில் அளித்தார். 

நீங்கள் பாஜகவில் இல்லையென தமிழிசை கூறியுள்ளது குறித்து:-

தமிழ்நாட்டு பாஜகவில் நான் இல்லை. தேசிய அளவிலான பாஜகவில் இளைஞர் பிரிவில் உறுப்பினராக உள்ளேன். தமிழ்நாட்டு பாஜகவில் நான் இல்லை என்பதை அவர்கள்(தமிழிசை) எப்படி முடிவு செய்தார்கள் என்பது தெரியவில்லை. ஏனெனில் இது பிராந்திய கட்சி அல்ல. என்ன நடந்தது என்று தெரியாமல் என் மேல் பழி போட்டது எனக்கு தப்பா படுகிறது. 

ஒரு பெண் தலைவராக உள்ள பாஜகவில் பெண்ணுக்கு எதிராக நடைபெறும் விஷயங்களை கேட்பதில்லை என்ற உங்களது ட்விட்டிற்கு பதில் அளித்தார்களா?

நிறைய சம்பவங்களில் பெண்களுக்காக நான் குரல் கொடுத்துள்ளேன். விமானத்தில் சோபியா என்ற பெண் சத்தம் போட்டதற்கு எதிராக நான் குரல் கொடுத்துள்ளேன். தேவையென்ற போது நம்மை பயன்படுத்திக் கொண்டு, தேவையில்லை எனும் போது தூக்கி எறியக் கூடாது. என்ன நடந்தது என்று நம்மிடம் விசாரிப்பது தான் ஒரு தலைவருக்கான அழகு. அவர்கள் அப்படி கேட்கவில்லை. இதுவரை அவர்கள் தவிர்த்து வந்து கொண்டே இருக்கிறார்கள். அதற்கு காரணம், அவர்கள் கூட உள்ள சில பேர் என்பது நன்றாகவே தெரியுது.

மேலும், வாகன சோதனை நடந்த நேரத்தில் நடந்த விஷயம் குறித்தும் விரிவாக பதில் அளித்தார். போலீசார் பயன்படுத்தும் பிரெத் அனலைசர் கருவி எவ்வளவு சதவீதம் ஆல்கஹால் உள்ள என்பதைதான் காட்டும் என்றும் ரத்த பரிசோதனை செய்தால் தான் மது அருந்தியதை உறுதி செய்ய முடியும் என்றும் கூறினார். ரத்த பரிசோதனைக்கும் தயார் என்றும் தெரிவித்தார்.