கோவையில் சொத்து வரி செலுத்த வேண்டியது நிலுவையில் இருப்பதாகக் கூறி வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் முன்பாக குப்பை லாரியை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகராட்சி சார்பில் சொத்துவரி வசூலிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக நீண்டகாலமாக வரித்தொகையை நிலுவையில் வைத்து, நோட்டீஸ் அனுப்பியபோதும் உரிய பதில் இல்லாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நிதி ஆண்டு இறுதி மாதம் (financial) என்று ஒருசிலர் ஏற்கனவே அவகாசம் கோரி இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், சின்னவேடம்பட்டி பகுதியில் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் வரி செலுத்த வேண்டி இருந்ததாக தெரிகிறது. நிறுவனம் சார்பில் நிதி ஆண்டு இறுதி என்பதால் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டிருந்ததாகவும் தெரிகிறது.
இவ்வாறான சூழலில் நிலுவைத்தொகை இருப்பதால், வரி வசூல் செய்யும் அதிகாரி நிறுவனத்தின் முன்பு குப்பைலாரியை குப்பைகளுடன் நிறுத்தக்கூறியதாக தெரிவித்து குப்பை லாரியை நிறுவனத்தின் நுழைவு வாயிலில் நிறுத்தி உள்ளனர். இது தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர் வீடியோ பதிவு செய்து பகிர்ந்துள்ளார். இதில் மாநகராட்சி ஊழியர் வரி வசூல் செய்யும் அதிகாரி இவ்வாறு செய்யச் சொன்னதாக தெரிகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் எனவும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப்பை தொடர்புகொண்டு கேட்டபோது, வரி வசூல் செய்வது தொடர்பாக குப்பை லாரிகளை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படவில்லை எனவும், இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.