தமிழ்நாடு

சென்னையில் கஞ்சா விற்கும் கும்பல் கூண்டோடு கைது : காவல்துறை அதிரடி

webteam

சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த கும்பல் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் அண்மைக்காலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அதிகளவில் கஞ்சா விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பள்ளி மற்றும் கல்லூரிகளை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்தனர். அதன் பலனாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிங்கராஜ் என்பவர் சிக்கினார். மதுரையைச் சேர்ந்த சிங்கராஜ் சென்னை அடையாறில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு கஞ்சா பொட்டலங்களை தயாரித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார். 

தமக்கு சென்னையில் 1,400 நிரந்தர வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த பிரியலட்சுமி மற்றும் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி ஆகியோரிடம் இருந்து மொத்தமாக ‌கஞ்சாவை வாங்கி அவற்றை சிறு சிறு பொட்டலங்களாக்கி விற்பனை செய்து வந்ததாகவும் சிங்கராஜ் தெரிவித்துள்ளார். 

தமது வாடிக்கையாளர்கள் தொலைபேசி மூலம் தம்மை தொடர்பு கொள்வார்கள் என்றும், நாளொன்றுக்கு சுமார் 50 கிலோ கஞ்சாவை விற்பனை செய்து வந்ததாகவும் காவல்துறையினரிடம் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து சிங்கராஜ், அவரது கூட்டாளிகளான பிரியலட்சுமி, பாண்டியன், சுப்பிரமணி, சூர்யா, செல்வம், துரை, வரதராஜன் ஆகியோரை காவல்துறையினர் கூண்டோடு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.