தமிழ்நாடு

''ஒத்தைக்கு ஒத்த வா'' - கஞ்சா போதையில் போலீஸை வம்பிழுத்தவர் கைது

''ஒத்தைக்கு ஒத்த வா'' - கஞ்சா போதையில் போலீஸை வம்பிழுத்தவர் கைது

webteam

ஈரோடு அருகே போலீசாரை தாக்கி, தகாத வார்த்தையால் பேசிய கஞ்சா வியாபாரியை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மகேஸ்வரி என்ற பெண்ணை போலீசார் இன்று கைது செய்ய சென்றனர். அப்போது அங்கு வந்த நபர் கஞ்சா போதையில் சித்தோடு காவல்நிலைய உதவி ஆய்வாளர் குகனேஷ்வரனை கையை பிடித்து, ''ஒத்தைக்கு ஒத்த வா'' என சண்டைக்கு வருமாறு கூறித் தாக்கியுள்ளார். மேலும் பொதுமக்கள் முன்னிலையில், "சீருடை அணிந்திருந்தால் நீ பெரிய ஆளா" என்பது போன்ற பல தகாத வார்த்தைகளால் திட்டி மகேஸ்வரியை கைது செய்யவிடாமல் தடுத்துள்ளார்.

இதனையடுத்து கஞ்சா போதையில் இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் கஞ்சா விற்கும் மகேஸ்வரியின் கணவன் விஜயகுமார் என்பதும், அவர்மீது கொலை, அடிதடி மற்றும் கஞ்சா விற்பனை என 18 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து விஜயகுமாரை, அரசு அதிகாரியை பணிசெய்ய விடாதது, தகாத வார்த்தைகளால் திட்டியது, தாக்கியது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர். அண்மைக்காலமாக ஈரோட்டில் கஞ்சா விற்பனை என்பது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.