தமிழ்நாடு

தடையை மீறி தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினர் வைத்த விநாயகர் சிலைகள் பறிமுதல்

தடையை மீறி தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினர் வைத்த விநாயகர் சிலைகள் பறிமுதல்

kaleelrahman

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.. தமிழக அரசு விதித்துள்ள தடையை மீறி இந்து அமைப்பினர் பொது இடங்களில் வைத்த விநாயகர் சிலைகளை போலீசர் பறிமுதல் செய்தனர். இதனால் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் விநாயக பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுடம் பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இதில், ஏராளமாக பக்தர்கள் கலந்துகொண்டு இறையருள் பெற்றனர்.

இந்நிலையில் கொரோனா நோய் பரவல் காரணமாக இந்து அமைப்புகளால் பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை வைக்க கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சுட்டிக்காட்டியது. ஆனால், இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால், நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தமிழக அரசின் தடையை மீறி இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்தனர். இந்த சிலைகளை போலீசாரும், வருவாய்த் துறையினரும் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர். இதனால் இந்து அமைப்பினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பலர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் தடையை மீறி நெல்லை, திண்டுக்கல், கரூர் போன்ற இடங்களில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் தொடர்பாக சுவாரஸ்யமான சம்பவங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் குடைப்பாறை பட்டியில் உள்ள கருப்பண சுவாமி கோயிலில், தமிழக அரசின் தடையை மீறி இந்து முன்னணி சார்பாக விநாயகர் சிலைகளை வைத்தனர். இதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் தாரை தப்பட்டை முழங்க விநாயகருக்கு பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை வைத்து வழிபாடு செய்தனர்.

தடையை மீறி வழிபாடு செய்து விநாயகர் சிலையை தூக்கி வந்த இந்து முன்னணியினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்து முன்னணியினர் வைத்த விநாயகர் சிலையை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து கோட்டை குளத்தில் கரைத்தனர்.

சத்தியமங்கலம்:
தடையை மீறி இந்து முன்னணியினர், பொது இடங்களில் விநாயகர் சிலையை வைப்பதாக கிடைத்த தகவலயைடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பவானீஸ்வரர் கோவில் எதிர்புறம் விநாயகர் சிலை வைக்க முயன்றபோது போலீசார் தடுத்தனர். இதனால் பல இடங்களில் விநாயகர் சிலை வைப்பதில் போலீசாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒசூர்:
ஓசூர் காந்தி சிலை முன்பு இந்து அமைப்பினர் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் போலீசார் அரசு விதிகளை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட கூடாது என்று அறிவுறுத்தினர் ஆனால், தொடர்ந்து பூஜை நடத்திய பின் வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச்சென்று அருகே உள்ள குளத்தில் விநாயகர் சிலையை கரைத்தனர்.

திருநெல்வேலி:
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் வருவாய்த் துறை மற்றும் காவல் துறையால் எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகளை மீண்டும் வைக்க அனுமதிக்க கோரி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலையை எடுத்துச் செல்லும் ஊர்வலம் நடைபெற்றது. டவுண் ரதவீதியில் தடையை மீறி விநாயகர் சிலையுடன் தொடங்கிய பேரணியில் தள்ளுமுள்ளு. 3 பெண்கள் உட்பட 41 பேர் கைது செய்யப்பட்டனர் . காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 48 விநாயகர் சிலைகளை வருவாய்த் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேலூர்:
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடைவிதித்த தமிழக அரசை கண்டிக்கும் வகையில் வேலூர் மாவட்ட இந்து முன்னனி அமைப்பினர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆஞ்சநேயர் கோவில் அருகில் விநாயகர் சிலை வைத்து வழிபட முயற்சி செய்தனர். இதனை அங்கு குவிக்கப்பட்டிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி சிலையை பறிமுதல் செய்தனர். இதை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட இந்து முன்னனி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

திருவண்ணாமலை:
தமிழக அரசின் உத்தரவை மீறி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் 50க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் 3 அடி உயர விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று சாலையில் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் சம்பவ இடத்தில் இருந்த ஆரணி காவல் துறையினர், நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினர்; சிலையை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை:
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்து இல்லங்களிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வலியுறுத்தியது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு அரசின் தடையை மீறி திடீரென இந்து முன்னணியினர் சார்பில் 6 அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இதனை அறிந்த காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் சிலையை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

கரூர்:
கரூர் நகரில் உள்ள வ.உ.சி. தெருவில் வைக்க முயன்ற விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது போலீசாருக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், ஒரு விநாயகர் சிலை சேதம் அடைந்தது. இதற்கு காரணமான காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியனை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி கரூர் பேருந்து நிலையம் முன்பு செந்தூர் பாண்டியனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரவாயல்:
மதுரவாயல் இந்து முன்னணி சார்பில் ஆண்டுதோறும் மதுரவாயல் மார்க்கெட் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் விநாயகர் சிலையை வைத்துக் கொள்வதாக இந்து முன்னணி அமைப்பின் சார்பில் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்டு கொண்டதின் பேரில் மதுரவாயல் பகுதியில் ஒரு விநாயகர் சிலை வைக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து மூன்று அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை மதுரவாயல் மார்க்கெட் அருகே வைத்து பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு பிரசாதங்களை இந்து முன்னணியினர் வழங்கினர்.இன்று மாலை 6 மணிக்குள் விநாயகர் சிலையை கரைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடாது எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.