தமிழ்நாடு

‘கஜா’ புயலால் வாடிய மக்கள் - தாகம் தீர்க்கும் தன்னலமற்ற மருத்துவர்

‘கஜா’ புயலால் வாடிய மக்கள் - தாகம் தீர்க்கும் தன்னலமற்ற மருத்துவர்

webteam

‘கஜா’ புயலால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவர் ஒருவர் புதுக்கோட்டை மக்களின் தாகம் தீர்த்து வருகிறார். 

‘கஜா’ புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர் உட்பட டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பல லட்சம் மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் முற்றிலும் நிலைகுலைந்துள்ளன. மீட்புப் பணிகளையும், உதவிகளையும் எதிர்பார்த்து மக்கள் தவித்து வருகின்றனர். 

அரசு சார்பில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உணவு, உடை, வீடு இன்றி மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் குடிப்பதற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, கடல்நீரை காய்ச்சி வடிகட்டி குடிக்கும் துயர நிலை ஏற்பட்டுள்ளது. ஏரளமான கால்நடைகள் புயலில் இறந்த நிலையில், மேலம் நூற்றுக்கணக்கான கால்நடைகள் தண்ணீரின்றி இறக்கும் நிலையை அடைந்துள்ளது.

அதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. நீர்நிலைகளில் இருக்கும் நீரையும் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. மின்சாரம் இல்லாததால் மோட்டார் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்ச முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். 

இதனால் மக்கள் கடந்த 4 நாட்களாக தவித்து வருகின்றனர். இந்நிலையில் அக்கச்சிபட்டி என்ற கிராமத்தில் அந்த நிலை ஓரளவிற்கு சமாளிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் மருத்துவர் சாமிநாதன். வீட்டில் இருக்கும் ஜெனரேட்டர் மூலம் மோட்டரை இயக்கி தொட்டியில் நீரை சேமித்து மக்களுக்கு வழங்கி வருகிறார். அனைவருக்கும் நீர் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5 குடங்கள் நீர் அளித்து வருகிறார். இப்படி 400 குடும்பங்களுக்குத் தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார். தன்னலமற்ற அந்த மருத்துவரின் சேவைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.