தமிழ்நாடு

கஜா புயலின் தாக்கம்... முற்றிலும் பாதிக்கப்பட்ட முல்லைப் பூ சாகுபடி!

கஜா புயலின் தாக்கம்... முற்றிலும் பாதிக்கப்பட்ட முல்லைப் பூ சாகுபடி!

webteam

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கஜா புயலின் தாக்கத்தால் முல்லைப் பூ சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி நாகை - வேதாரண்யம் இடையே கஜா புயல் கரையைக் கடந்தது. இதனால் நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. மேலும் பலரும் தமது வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். தென்னை, வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நாசமாகின. வேதாரண்யம் தாலுகாவில் கஜா புயலின் தாக்கத்தால் முல்லைப் பூ சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம் அருகே ஆதனூர், கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கரில் முல்லைப் பூ சாகுபடி நடைபெற்று வந்தது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்த இந்த முல்லைச் செடிகள் புயல் காற்றில் ஒடிந்து நாசமாகியுள்ளன. குறைந்தபட்சமாக மாதம்தோறும் 10 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பெற்றுத் தந்த இந்தச் செடிகளை மீண்டும் உருவாக்க ஓராண்டாகும். அதன் பிறகும் இரண்டாண்டுகள் கழித்தே விற்பனைக்கான மலர்களைப் பெற முடியும் என்பதால் சுமார் 3 ஆண்டுகள் வரை தங்கள் பொருளாதாரத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் அப்பகுதி விவசாயிகள் தவித்து நிற்கின்றனர்.

(மாதிரிப்படம்)
 
ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு மற்றும் தோட்டக் கலைத் துறை சார்பில் உரம் உள்ளிட்ட இடுபொருட்களை வழங்கினால் மட்டுமே தங்களால் ஓரளவிற்கு மீண்டெழ முடியும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வருமானத்துக்கு குடும்பங்களின் ஆணி வேரைப் போன்று திகழ்ந்த முல்லைச் செடிகளை புயலில் பறிகொடுத்து விட்டு வாடி நிற்கும் இவ்விவசாயிகள் தங்களுக்கு அரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியுடன் காத்திருக்கின்றனர்.