தமிழ்நாடு

“இளைஞர்களே! புதுக்கோட்டையை மீட்போம் வாருங்கள்” - முகநூல் அழைப்பு

“இளைஞர்களே! புதுக்கோட்டையை மீட்போம் வாருங்கள்” - முகநூல் அழைப்பு

webteam

தமிழகத்தை கடந்த ஒரு வாரமாக அச்சுறுத்தி வந்த கஜா பயுல் நேற்று கரையைக் கடந்தது. கஜா புயலால், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது புதுக்கோட்டை மாவட்டம். இங்கு தொலைத்தொடர்பு சரிவர இயங்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் பலரும் பதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் வெளியூரிலிருந்து தங்களின் சொந்த ஊரிலுள்ள அவலநிலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் பலரின் பதிவுகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு புதுக்கோட்டைக்காரரின் பதிவுதான் இது.

“மதிப்பிற்கும் பெருமரியாதைக்குரிய தமிழகமெங்கும் உள்ள இளைஞர்கள், நண்பர்கள், மாணவ மாணவிகள் மற்றும் என் உயிரினும் மேலான பசுமை ஆர்வலர்கள் அனைவருக்கும் வணக்கம்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 80 சதவீதத்திற்கும் மேலான பசுமையான மரங்கள், மின் கம்பங்களின் மீது விழுந்து 100% புதுக்கோட்டை மாவட்டம் மின்சாரம் இல்லாத மாவட்டமாக ஒரு தீவு போல் காட்சியளிக்கிறது.

இதனை பொதுவெளியில் பகிரவோ வெளியிடவோ இணையதள வசதியும் மின்சார வசதியும் இல்லாத காரணத்தினால் புதுக்கோட்டை மக்களின் இன்னல்கள் இன்னும் உலகுக்கு முழுமையாக தெரியவில்லை. ஊடகங்களும் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் இன்னல்களை நேரில் அறிய வாய்ப்பில்லாமல் உள்ளது. காரணம், சாலை இருமருங்கிலும் மரங்கள் விழுந்து வாகனங்கள் செல்ல இயலாத நிலை நிலவுகிறது.

புதுக்கோட்டை நகர பகுதிகளிலும் அதனைவிட அனைத்து கிராமங்களிலும் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.  அயல்நாடுகளில் வசிக்கும் அவரது உறவினர்கள் இதுவரையில் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேச  முடியாத ஒரு இக்கட்டான நிலைதான் நீடிக்கிறது.

இன்னும் ஓரிரு தினங்களுக்கு மட்டுமே அவர்களுக்கு குடிநீர் இருப்பு இருக்க வாய்ப்பு உள்ளது. தயவுசெய்து தமிழகமெங்கும் உள்ள இளைஞர்கள், நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் புதுக்கோட்டைக்கு வருகை தந்து புதுக்கோட்டை மக்களை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பச் செய்திட உதவும்படி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

தற்போதைய அவர்களுடைய தேவை; குடிநீர் மற்றும் மின்சாரம் (வெகு சிலருக்கு உணவு, உடை)

அதற்காக நாம் அனைவரும் முதன்முதலில் செய்ய வேண்டியது, மின்வாரியத்துடன் இணைந்து வேரோடு சாய்ந்துள்ள மரங்களை அகற்றி, மின்சாரத்தை வெகுவிரைவில் அளித்திட உறுதுணையாக இருப்பது.

நாம் அகற்றும் மரங்களின் கிளைகளை பத்து அடி அளவிற்கு வெட்டி, அதனை ஒரு பசுமை ஆர்வலர் குழு மூலம் நடவு செய்து கொண்டு வந்தால் தற்போதைய மழை கால பருவத்தில் மூன்றே மாதத்தில் அது மரமாக மாறும். அதுவே நாம் ஏற்கெனவே இழந்த மரத்தின் கிளையிலிருந்து மீண்டும் பசுமையைப் பெற வாய்ப்பாகவும் அமையும்.” என்று புதுக்கோட்டை சேர்ந்த செல்வராஜ் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு: 

பசுமைதேசம் சதீஷ்குமார்
புதுக்கோட்டை 97 86 56 42 75