தமிழ்நாடு

கஜா புயல்.. பல்வேறு பல்கலை.,யில் தேர்வுகள் ஒத்திவைப்பு

கஜா புயல்.. பல்வேறு பல்கலை.,யில் தேர்வுகள் ஒத்திவைப்பு

Rasus

கஜா புயலையடுத்து பல்வேறு பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கஜா புயல் இன்று மாலை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தேர்வுக்கான மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்த தேர்வுகள் வரும் 24‌-ஆம் தேதி நடைபெறும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதேபோல், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகத்திலும் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் டிசம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழுள்ள புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் ஆகிய யூனியன் பிரதேசங்களில் இன்று நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பள்ளிகளுக்கு விடுமுறை..

கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.