தமிழ்நாடு

பத்திரிகையாளர் மரணம்: 'அது எங்க கட்டுப்பாட்டுலேயே இல்ல' - ககன்தீப் சிங் பேடி

பத்திரிகையாளர் மரணம்: 'அது எங்க கட்டுப்பாட்டுலேயே இல்ல' - ககன்தீப் சிங் பேடி

Sinekadhara

சென்னையில் புதிய தலைமுறை உதவி ஆசிரியர், மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த பகுதி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், அது நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் வருவதாகவும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ''தடுப்புகளில் குறைபாடுகள் இருந்தால் மக்கள் புகார் அளிக்க வேண்டும். மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள தடுப்புகளில் குறைபாடுகள் இருந்தால் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஊடகவியலாளர் விபத்துக்குள்ளான பகுதி மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை.  தடுப்புகளில் குறைபாடுகள் குறித்து தகவல் தெரிவித்தால் விபத்துகளைத் தடுக்கலாம்’’ என்று கூறினார். 

இதற்கு முன்பு, சென்னையில் மழைநீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வு காணும் வகையில் 1,366 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பது சம்பந்தப்பட்ட பொறியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருசில இடங்களில் தடுப்புகள் அமைக்கப்படாத ஒப்பந்ததார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பணிகள் நடைபெறும் பகுதிகளில் தடுப்புகளுக்கு இடையே கடந்து செல்லக் கூடாது என்றும், தடுப்புகளை சுற்றி கடந்து செல்லவும், பாதுகாப்பாக செல்லவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 

அதேசமயம், வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் தடுப்புகள் இல்லாவிட்டால் 1913 என்ற உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.