கஜா புயலால் காவிரி டெல்டாவில் வீழ்ந்து கிடக்கும் தென்னை, தேங்காய் விலையை பேரம் பேசி குறைக்க முயற்சிக்க வேண்டாம் என வியாபாரிகளிடம் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், “கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களை பார்வையிட நாங்கள் குழுவாக வந்துள்ளோம். வெளியான தகவல்களை காட்டிலும் இங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.
பல லட்சக் கணக்கான மரங்கள் இங்கு வீழ்ந்து கிடக்கின்றன. மின்சாரம் இங்கு வருவதற்கு ஒரு மாதம் ஆகும் என்று சொல்கிறார்கள். அரசு, தன்னார்வலர்கள் என பல தரப்பினரும் நிவாரண மற்றும் மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். அப்படி இருந்தும் இங்கு போதாத நிலைதான் உள்ளது. இந்த நிலையை மீட்டுக் கொண்டு வர பல மாதங்கள் ஆகும்.
இங்கு லட்சக்கணக்கான தேங்காய் மரங்களும், தேங்காய்களும் வீழ்ந்து கிடக்கின்றன. வீழ்ந்து கிடக்கும் தேங்காய்களை விவசாயிகள் விற்க முயன்றால் வியாபாரிகள் குறைவான விலைக்கு வாங்குகிறார்கள். இது மிகவும் தவறான விஷயம் என நினைக்கிறேன். விவசாயிகளுக்கு அவர்களிடம் தற்போது உள்ள தேங்காய் உள்ளிட்ட பொருட்களுக்கு மார்க்கெட் விலை கிடைக்க வழி செய்ய வேண்டும். இந்தப் பணியை யாராவது ஒருங்கிணைக்க வேண்டும். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண் பரிசோதனை செய்து குறுகிய கால பயிர் விலைவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
முன்னதாக, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு லாரிகளில் ஜி.வி.பிரகாஷ் நிவாரணப் பொருட்களை அனுப்பி இருந்தார். தற்போது, பாதிக்கப்பட்ட பகுதியில் நேரில் சென்று உதவி வருகிறார்.