G. Ramakrishnan Facebook
தமிழ்நாடு

12 மணி நேர வேலை மசோதா வாபஸ்: ‘முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது’ - ஜி.ராமகிருஷ்ணன்

12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டது வரவேற்கத்தக்கது எனக் கூறியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்.

PT

மே தினத்தை முன்னிட்டு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கொடியேற்றி சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்வில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

CPIM May day celebration

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “இன்று 138-வது மே தின விழா. ‘8 மணி நேர வேலை’ என்பதை உழைக்கும் மக்கள் கரத்தாலும், கருத்தாலும் ரத்தம் சிந்தி போராடி பெற்ற நாள் இது.

தொழிலாளர்களின் உரிமைக்கான, மனித இனத்துக்கான நாள் இன்று. அடுத்த ஆண்டு இதே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 9 ஆண்டுகாலமாக மத்திய அரசு உழைப்பாளி மக்களின் உரிமைகளை பறித்து வருகிறது‌. 44 தொழிலாளர் சட்டங்களில் 15 சட்டங்களை அறவே ஒழித்து விட்டது. 29 தொழிலாளர் நலச் சட்டங்களை அரசு திருத்தி உள்ளது.

G. Ramakrishnan

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு, இந்துத்துவா - கார்ப்பரேட் என்ற கூட்டு ஆட்சியை செய்கிறது. அந்த அரசை அடுத்த ஆண்டு வீழ்த்த உழைக்கும் மக்கள் உழைத்து வருகின்றனர்” என்றார்.

12 மணி வேலை மசோதாவை தமிழ்நாடு அரசு முழுமையாக திரும்ப பெறுவதாக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தது குறித்து பேசிய ஜி.ராமகிருஷ்ணன், “முதல்வரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. சட்டமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட போதே இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. தொழிற்சங்கங்களும் எதிர்த்தன'' என்றார்.