சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் நவீனப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கிடு செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியதாவது:
மத்திய அரசின் தொடர் நடவடிக்கை மூலம் 4 ஜி சேவை கிராமங்களுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 534 கிராமங்களில் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் தமிழகத்திற்கு சேவைகள் கிடைக்கும். வரும் செப்டம்பர் 17-ம் தேதி சர்வதேச கடற்கரை தூய்மை தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதில் 75 கடற்கரைகளை தூய்மைபடுத்தும் பணி இந்தியா முழுவதும் நடைபெறும்.
சென்னை மெரினா கடற்கரையை தூய்மைபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம். பிஎஸ்என்எல் துறையை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, ரூ.1.64 லட்சம் மதிப்பில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெண்டர் ஒதுக்கீடும் செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.