போக்குவரத்து துறை புதிய தலைமுறை
தமிழ்நாடு

வலுக்கும் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கை... எச்சரித்த போக்குவரத்து துறை... பின்னணி என்ன?

தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சங்கங்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதற்கான காரணங்கள் என்னென்ன மற்றும் அவர்களின் கோரிக்கைகள் என்னென்ன என்பவை பற்றி விளக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஜெனிட்டா ரோஸ்லின்

பொங்கலுக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஒருபுறம் மக்கள் தயாராகிக் கொண்டிருக்க... மறுபுறம் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வருகின்ற ஜனவரி 9-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளன. போக்குவரத்து தொழிற்சங்கள் திடீரென போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதற்கான காரணம் என்ன? போராட்ட அறிவிப்பின் பின்னணி என்ன? இவற்றை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப் படியை வழங்க வேண்டும் போன்று பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் முன்வைத்தன.

6 அம்ச கோரிக்கை:  

போக்குவரத்து தொழிற்சங்கள் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தியுள்ளன. அவை:

1) உடனடியாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.

2) ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படியை நிறுத்திவைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

3) பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்.

4) 20,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

5) ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர் என்று 812 பேரை நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.

6) போக்குவரத்துத்துறை இழப்பை ஈடுகட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.

ஆகியவை.

இவற்றை வலியுறுத்தியே சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ் உட்பட 16 தொழிற்சங்க கூட்டமைப்புகள் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையிலான 12 தொழிற்சங்க கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன.

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை:

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் இறங்கப்போவதாக கடந்த டிசம்பர் மாதமே அறிவிப்பை வெளியிட்டிருந்தன சங்கங்கள்.

அதையடுத்து, ‘வேலை நிறுத்தபோராட்டத்தினை கைவிடவும்’ எனக்கோரி தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக தேனாம்பேட்டையில் டிசம்பர் 27 ஆம் தேதி தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர் நல ஆணையர், போக்குவரத்துக் கழகங்கள், தொழிற்சங்கங்கள் ஆகியோரை கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால் அந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. பின் மீண்டும் இரண்டாம் கட்டமாக ஜனவரி 3 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதுவும் சமரசத்தில் முடியவில்லை.

இப்படி பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்ததால் ஜனவரி 9 ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் மீண்டும் அறிவித்தன.

இந்நிலையில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், போக்குவரத்து தொழிலாளர்கள் தற்காலிகமாக இப்போராட்டத்தினை தொடங்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று புதிய தலைமுறை சார்பாகவும் கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக அமைச்சர் சிவசங்கர், “தொழிற்சங்கங்களை பொறுத்தவரை தொழிலாளர்கள் தங்களது நலன் கருதி வைக்கும் கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அவர்கள் பொங்கல் நேரத்தில் இப்போராட்டத்தினை முன்னெடுப்பது குறித்து சற்று கருத்தில் கொள்ள வேண்டும்.

போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் பேச அரசு தயாராக உள்ளது. பண்டிகை காலத்தினை கருத்தில் கொண்டு போராட்ட முடிவினை ஊழியர்கள் கைவிட வேண்டும். அரசு சார்பில் நடைபெறும் நிகழ்வுகள், முதலீட்டாளர்கள் மாநாடு, சட்டமன்ற கூட்டத்தொடர், பொங்கல் திருநாள் போன்ற அரசு ஏற்று நடத்தும் நிகழ்வுகளும் அடுத்தடுத்து இருக்கிறது.

எனவே இவை முடிந்த பிறகு தொழிற்சங்கங்களை அழைத்து பேசுவோம். பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் தொழிற்சங்கத்தினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

1 நாள் கால அவகாசம்: 

இந்நிலையில் நேற்று முன்தினம் (5.1.2024) போக்குவரத்து கழக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், சென்னை பல்லவன் இல்லத்தில் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற்றது. இக்கூட்டத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மாநகர் போக்குவரத்துக் கழக மேலான் இயக்குநர், டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பேச்சு வார்த்தையிலும் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

சிஐடியு தொழிற்சங்கத்தின் தலைவர் சௌந்தரராஜன்:

இதில் கலந்து கொண்ட சிஐடியு தொழிற்சங்கத்தின் தலைவர் சௌந்தரராஜன், பேச்சுவார்த்தை குறித்து தெரிவிக்கையில், “தொழிலாளர்களின் நல்ல எண்ணத்தினை அரசு புரிந்து கொள்ளவேண்டும். அமைச்சர் கூடுதல் அவகாசம் கேட்டதில் எங்களுக்கு திருப்தியில்லை.

இருப்பினும் மக்களின் சிரமத்தினை கருத்தில் கொண்டு அவகாசம் அளித்தோம். தொ.மு.ச.வினர் எங்கள் கோரிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராடுவதை தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் வருகிற 9ஆம் தேதி பணிக்கு வரவில்லை என்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 9ஆம் தேதி மற்றும் அதற்கு பின்னர் வழங்கப்பட்ட விடுப்புகள் யாவும் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது நிலையாணை விதிகளின்படி சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தூண்டிவிடும் செயல்களில் ஈடுபடும் தொழிலாளர்களின் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

இப்பிரச்னைக்கு எப்போது சுமூகமான தீர்வு காணப்படும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.