வேலை நிறுத்தத்தில் போக்குவரத்து சங்கங்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

வேலை நிறுத்தத்தில் போக்குவரத்து சங்கங்கள்! எங்கெங்கே எவ்வளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன?

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இயங்கும் பேருந்துகளில் விவரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஜெனிட்டா ரோஸ்லின்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக சங்கங்கள் இன்று (9.1.2024) முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கடந்த டிசம்பர் 19 ஆம் தேதியே அறிவித்திருந்தது. இதுதொடர்பாக அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி, பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உட்பட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸை வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் இவர்களின் கோரிக்கைகளை தீர்த்துவைப்பதற்காக அரசு தரப்பில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் எதுவும் சமரசத்தில் முடியாததால் தமிழகம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தினை துவங்கியுள்ளனர்.

இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பேருந்துகள் வழக்கம் போல இயங்காமல் உள்ளது. மக்கள் சிரமத்திற்கு உள்ளாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எந்தெந்த மாவட்டங்களில் பேருந்துகளில் இயக்கம் தற்போது எவ்வாறு உள்ளது என்பது குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

கடலூர்

கடலூர் பணிமனையில் பல பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காலை 6 மணி முதல் 41 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய கடலூர் பணிமனையில் இருந்து, 24 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன. மேலும் தேவையில்லாத விபரீதங்களை தடுப்பதற்காக அனைத்து பணிமனைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே அங்கு போராட்டம் நடத்திய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்ட பணிமனைகளில் காவல்துறை பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 80% பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். திருவனந்தபுரம் - நாகர்கோவில் வழித்தடத்தில் வழக்கமான அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் குளித்துறை, படந்தலுமூடு பணிமனையில் இருந்து 27 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குளித்துறையை பொறுத்தவரை உள்ள 800 தொழிலாளர்களில் 1 சதவீத ஊழியர்களே பணிக்கு சென்றுள்ளதாக போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை:

மதுரை பணிமனையில் இருந்து பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மதுரையில் இருந்து சென்னை, நெல்லை, திருச்சி பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. குறிப்பாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து 10 சதவீதம் கூட பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

தஞ்சை

தஞ்சை மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. தஞ்சை நகர்ப்பகுதியில் மட்டும் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. தஞ்சை மாநகர் பகுதிகளில் 93 பேருந்துகளில் 25 பேருந்துகள் மட்டுமே இயங்குகிறது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதுக்கோட்டை மாநகரில் காலை 6 மணி வரை 30 பேருந்துகள் இயக்க வேண்டிய நிலையில் 25 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நெல்லை

நெல்லை கோட்டத்தில் பொறுத்தவரை 100% சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. நெல்லை கோட்டத்தில் உள்ள 4 மாவட்டங்களிலும் 1700 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சேலம்

சேலம் கோட்ட போக்குவரத்துக்கழகத்தில் 100%, அதாவது 1,063 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் 17 பணிமனைகளில் இருந்து புறநகர், மாநகர் பகுதிகளுக்கு வழக்கம் போல் பேருந்து சேவை நடைபெறுகிறது.

திருச்சி

திருச்சியில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டுவருதாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி திருச்சியின் நகர் (ம) புறநகர் பகுதிகளுக்கு 90 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புறநகர் உள்பட 2 கிளைகளில் இருந்து 110 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோவை

கோவையில் 100 சதவீத அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மாநகர, புறநகர பகுதிகளுக்கு வழக்கம் போல் 581 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று கோவை மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார். தேவைப்படும் பட்சத்தில் ஓய்வுபெற்ற ராணுவ ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பணிமலை, பேருந்து நிலையங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி விழுப்புரம் கோட்டம் - 76 %, சேலம் கோட்டம் - 100%, கோவை கோட்டம் -100%, கும்பகோணம் - 93%, மதுரை - 94%, நெல்லை - 100% சேவை வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.