தமிழ்நாடு

முழு ஊரடங்கு: ஆட்டோ, டாக்ஸிகளில் அதிக கட்டணம்: தடுக்க வேண்டும் - டிஜிபி

முழு ஊரடங்கு: ஆட்டோ, டாக்ஸிகளில் அதிக கட்டணம்: தடுக்க வேண்டும் - டிஜிபி

kaleelrahman

முழு ஊரடங்கின் போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடந்த 9ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கின் போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் சிறப்பாக பணியாற்றி இருப்பதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு பாராட்டி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

மேலும் அந்த சுற்றறிக்கையில், முழு ஊரடங்கின் போது பொதுமக்கள் சிலர் பொறுப்பற்ற முறையில் காவலர்களிடம் நடந்துகொண்டதாகவும், சிலர் காவலர்களை தாக்கிய போதும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் துறைக்குரிய பொறுப்புடனும், பொறுமையுடனும், மனிதாபிமானத்துடனும், சாமர்த்தியத்துடனும் பணியாற்றியதற்காக தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

அதேபோல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்கள் ரோந்து சென்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியது காவல்துறை மீது மக்களுக்கு நன்மதிப்பையும், நம்பிக்கையையும், ஏற்படுத்தியதாக சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முழு ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறியதாக கடந்த 9ஆம் தேதி 19,962 வழக்குகளும், 16ஆம் தேதி 14,956 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 78 லட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக முழு ஊரடங்கின் போது வெளியூர் சென்று திரும்புவோர் ரயில் நிலையம், பேருந்து நிலையம் வந்த பின்பு வீடு செல்வதற்கு ஆட்டோ மற்றும் டாக்ஸி கிடைக்காமல் அவதியுற்றதாகவும், சில ஆட்டோ பயணத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளது. இனிவரும் முழு ஊரடங்கு நாட்களில் வெளியூர் சென்று திரும்பும்போது மக்களுக்கு ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் ஆட்டோ மற்றும் டாக்ஸியில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் பயணிக்க வசதி ஏற்படுத்தி கொடுக்குமாறு அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார்.