முழு ஊரடங்கில் தேவையின்றி சுற்றியதாக 60 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கையொட்டி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், வாகன தணிக்கைகள் குறித்து அமைந்தகரை அண்ணா ஆர்ச் அருகில் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது... இன்று முழு ஊரடங்கையொட்டி சென்னை முழுவதும் 7 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 200 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு செல்வோரிடம் உரிய ஆவணங்களை சரிபார்த்த பின் அவர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறார்கள். இதுவரை முழு ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றிய 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முன்களப் பணியாளர்களாக செயல்பட்டு வரும் காவல் துறையினரில் இதுவரை 3 ஆயிரத்து 609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 258 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் சென்னை காவல்துறையை சேர்ந்த 13 பேர் உயிரிழந்துள்ளனர். முதல் அலையில் இறந்த காவல் துறையினர் குடும்பங்களுக்கு அரசின் நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் அலையில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்னை காவல் துறையினர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். சென்னை காவல் துறையினர் அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் காவல்துறையினருக்கென்று வழிகாட்டு முறைகளை வகுத்து கொடுத்துள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் நிலையங்களுக்கு வெளியே பந்தல் அமைத்து காவல் துறையினர் புகார்தாரர்களிடம் விசாரிக்க வேண்டும். காவல் நிலைய வாசலிலேயே கைகழுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். சானிடைசர்கள் பயன்படுத்த வேண்டும். கைதானவர்களை விசாரிக்க பிபிஇ கிட் வழங்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக மருத்துவமனைகளுக்கு விசாரணைக்கு செல்லும் போலீசார் பிபிஇ கிட் அணிந்து வழக்குகளை விசாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைய முழு ஊரடங்கிற்கு மக்கள் போதுமான ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். இதேபோல வாக்கு எண்ணிக்கை அன்றும் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகிறேன். அதுமட்டுமல்லாமல் காவல் துறையினருக்காக அண்ணா பல்கலையில் கொரோனா சிறப்பு மையமும் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்' என்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.