தமிழ்நாடு

இன்று முதல் ஆவினுக்கு பால் விநியோகம் நிறுத்தம்! தாக்குப்பிடிப்பார்களா சென்னை மக்கள்?

இன்று முதல் ஆவினுக்கு பால் விநியோகம் நிறுத்தம்! தாக்குப்பிடிப்பார்களா சென்னை மக்கள்?

webteam

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் வரை உயர்த்தி தரவேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை நிகாரகரிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் பால் விநியோகம் நிறுத்தப்படுவதாக கால்நடை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆவின் நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் உள்ள கால்நடை விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்து பதப்படுத்தி மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. அதன்கீழ் தமிழ்நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 27 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை நடைபெறும் நிலையில், அதில் சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 14.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை நடைபெறுகிறது.

தமிழ்நாடு முழுவதும் 9,300 கூட்டுறவு பால் சங்கங்கள் இருக்கும் நிலையில், அவை 3 பெரும் பால் உற்பத்தியாளர் சங்கமாக செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர், ஒரு லிட்டர் ஆவின் பால் விலையில் லிட்டருக்கு 7 ரூபாய் உயர்த்தித் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசருடன் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தின.

அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் உற்பத்தியாளர்கள் தரப்பிலிருந்து பால் விநியோக நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் இன்று முதல் ஆவினுக்கு பால் வழங்கப் போவதில்லை என்ற முடிவு எட்டப்பட்டுள்ள நிலையில், அதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ஐந்து லட்சம் லிட்டர் அளவிற்கு ஆவின் பால் கொள்முதல் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை சோழிங்கநல்லூர், மாதவரம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்களாக மாற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

பால் விநியோகம் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், பால் பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தி நிலையங்களில் பொதுவாக நடைமுறையில் இருக்கும் முறைப்படி, அடுத்த 36 மணி நேரத்திற்குத் தேவையான பால் கையிருப்பில் இருக்கும் என்றும், இதனால் பால் தட்டுப்பாடு இன்று பெரிதாக தெரியவாய்ப்பில்லை என்றும், ஆனால் நாளை முதல் பால் விநியோக தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் சோழிங்கநல்லூர், அம்பத்தூர், மாதவரத்தை பொறுத்தவரை பால் பாக்கெட்கள் விநியோகம் செய்யும் லாரிகள் காலையில் கிளம்பின. பால் நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.