தமிழ்நாடு

”சீமான் முதல் குஷ்பூ வரை” - தோல்வியை சந்தித்த நட்சத்திர வேட்பாளர்கள்

”சீமான் முதல் குஷ்பூ வரை” - தோல்வியை சந்தித்த நட்சத்திர வேட்பாளர்கள்

webteam

தமிழகத் தேர்தலில் களம்கண்ட நட்சத்திர வேட்பாளர்களில் சிலர் மட்டுமே வெற்றிக்கனியைப் பறித்துள்ளனர். அந்த வகையில் அதிக கவனம் ஈர்த்து தோல்வியை தழுவிய வேட்பாளர்களை பற்றி இந்தக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் கே.பழனிசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமாரைவிட, 72 ஆயிரத்து 856 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலை வகித்த பழனிசாமி, 1 லட்சத்து 60 ஆயிரத்து 730 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சம்பத்குமார் 87 ஆயிரத்து 874 வாக்குகளைப் பெற்றார்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், அங்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமை விட, 70 ஆயிரத்து 230 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலின் 1 லட்சத்து 4 ஆயிரத்து 622 வாக்குகள் பெற்ற நிலையில், ஆதிராஜாராம் 34 ஆயிரத்து 392 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.

அமமுக-வின் முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன், கோவில்பட்டி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம், 12 ஆயிரத்து 403 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். டிடிவி தினகரன் 56 ஆயிரத்து 153 வாக்குகள் பெற்ற நிலையில், 68 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்று வெற்றிகண்டார் கடம்பூர் ராஜு.

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பாக போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தி.மு.க. வேட்பாளர் கயல்விழி செல்வராஜை விட ஆயிரத்து 393 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்தார். தொடக்கம் முதலே முன்னிலை பெறுவதும், பின்னடைவை சந்திப்பதுமாக இருந்து வந்த எல்.முருகன், மொத்தமாக 88,593 வாக்குகள் பெற்றிருந்தார். திமுக வேட்பாளர் கயல்விழி 89,986 வாக்குகளுடன் வெற்றி வாகை சூடினார்.

பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பூ படுதோல்வி அடைந்துள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை விட, 32,200 வாக்குகள் குறைவாகப் பெற்று குஷ்பூ தோல்வியடைந்தார். நடிகை குஷ்பூவுக்கு 39 ஆயிரத்து 237 வாக்குகளும், மருத்துவர் எழிலனுக்கு 71 ஆயிரத்து 437 வாக்குகளும் கிடைத்துள்ளன.

திருவொற்றியூர் தொகுதியில் களம் கண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 48 ஆயிரத்து 597 வாக்குகள் பெற்றும் தோல்வியையே தழுவினார். அந்த தொகுதியில் 88 ஆயிரத்து 185 வாக்குகளுடன் திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக இரண்டாம் இடம் பிடித்த அதிமுக வேட்பாளர் குப்பன், 50 ஆயிரத்து 524 வாக்குகள் பெற்றிருந்தார். சீமான் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயுரா ஜெயக்குமார் முன்னிலை வகிக்க, இரண்டாம் இடத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும், மூன்றாவது இடத்தில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும் இருந்தனர்.

நேரம் செல்ல செல்ல முன்னிலை வகிக்கத் தொடங்கினார் கமல்ஹாசன், வானதியும் மெல்ல மெல்ல முன்னேற ஆரம்பித்தார். கமலுக்கும், வானதிக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசமும் மிகக் குறைவாகவே இருந்தது. இறுதியாக, 53 ஆயிரத்து 209 வாக்குளுடன் வானதி சீனிவாசன் வெற்றி பெற, 51 ஆயிரத்து 481 வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினார் கமல்ஹாசன். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் ஆயிரத்து 728 ஆக உள்ளது.