தமிழ்நாடு

பாண்டிய நெடுஞ்செழியன் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை... தமிழின் பெருமையை சுட்டிக்காட்டிய அமைச்சர்

பாண்டிய நெடுஞ்செழியன் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை... தமிழின் பெருமையை சுட்டிக்காட்டிய அமைச்சர்

kaleelrahman

தமிழின் ன், ழ சொற்களின் பெருமையை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பெயரில் இருப்பதை சுட்டிக்காட்டி தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை பதிலுரையில் பேசிய தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ் மொழியின் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சொல்லை தான் நாம் இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம்.

தமிழ் தனித்து இயங்க கூடிய மொழி என்று கூறிய அமைச்சர், உதாரணத்திற்கு 'ன் ' என்ற எழுத்து அசோகனின் பிராமியில் கிடையாது. ஆனால், கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருளில் ஆதன் என்ற பெயர் உள்ளது. அதில், 'ன் ' வருகிறது. இதனால் அசோகன் காலத்திற்கு முன்பே தமிழில் எழுத்து இருந்ததை காட்டுகிறது.



அன்று கிடைத்த ' ன் ' தான் இன்றைய எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் பெயரில் பன்னீரில் ' ன் ' வருகிறது. அதே போல அவை முன்னவர் பெயரிலும் ' ன் ' என்றே முடிகிறது. மேலும் முதலமைச்சர் பெயரை உச்சரித்தாலும் இந்த ' ன் ' வருகிறது. இந்த ன் சிறப்பு நம் தமிழுக்கு கிடைத்த பெருமை.

அதேபோல் தமிழில் பல எழுத்துக்கள் உள்ளன. ' ழ ' என்ற எழுத்து எந்த மொழியிலும் இல்லை. நம்ம எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி பெயரில் ' ழ ' எழுத்து வருகிறது. ஆக ' ழ ' வாக இருந்தாலும் ' ன் ' ஆக இருந்தாலும் தொடர்ந்து தமிழின் பெருமையாக உள்ளது.

தமிழணங்கு என்ற பெயரில் ஏ,ஆர்.ரஹ்மான் இசை ஆல்பம் உருவாக்கியுள்ளார். தமிழ் தாய் என்றாலே கலை வடிவமாகத்தான் நமக்கு தோன்றும். இந்த நிலையில், புலியை முறத்தால் துரத்திய புறநானூற்று தாய் போன்ற உருவத்தை வைத்து, அவள் கையில் சூலாயுத்தை கொடுத்து, அதன் உச்சியில் ழ பொறிக்கப்பட்டது என்றால் பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் காலம் வரை ழ வருகிறது என்பது தான் தமிழின் பெருமையை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஒ.பன்னீர்செல்வம் பேசிய போது, 'அமைச்சர் ' ன் ' எழுத்து இங்கு என் பெயரில் வருவதாக சொன்னார். அவர் பெயரிலும் ' ன் ' வருகிறது, அந்த பெருமையை அவரும் பெற்றுள்ளார். மேலும், பேரவை தொடங்கும் போது திருக்குறள் சொல்லப்படுகிறது. அதே போல, தமிழ்தாய் வாழ்த்து பாடலாம் என்று எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது கோரிக்கை முன்வைத்தார்.