தமிழ்நாடு

“குடிபோதையில் பேசும் போது தகராறு” - நண்பனை கொன்ற நண்பர்கள்

“குடிபோதையில் பேசும் போது தகராறு” - நண்பனை கொன்ற நண்பர்கள்

webteam

‘நேர்கொண்ட பார்வை’ டிக்கெட் வாங்கும்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக நண்பர்கள் 4 பேரும் பேசும்போது பிரச்னை ஏற்பட்டு ஒருவர் கொல்லப்பட்டார்.

திருச்சியை சேர்ந்த தமிழழகன் மற்றும் ‘காக்கா’ கார்த்திக் இருவரும் கடந்த 7ஆம் தேதி ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை காண தியேட்டர் சென்றுள்ளனர். அங்கு டிக்கெட் வாங்கும் போது இவர்கள் இருவருக்கும் பொன்மலை பகுதியை சேந்த பிரபாகர் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது, இருவரும் பிரபாகரனை கத்தியால் வெட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த அவர் பொன்மலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில் தமிழழகன், ‘காக்கா’ கார்த்தி ஆகிய இருவரும் தங்களின் மற்ற இரு நண்பர்களான மணிகண்டன் மற்றும் ஆட்டோ ஜெகன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது போதையில் பேசிய மணிகண்டன், ‘கத்தியை பிடித்து வெட்ட கூட தெரியவில்லை’ என தமிழழகனை பார்த்து கிண்டல் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தமிழழகன் மணிகண்டனை கத்தியால் வெட்ட முயன்றுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஜெகன், மணிகண்டன் மற்றும் ‘காக்கா’ கார்த்திக் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தமிழழகனை கட்டையால் அடித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த தமிழழகன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை அரியமங்கலத்தில் உள்ள கணேசபுரம் சுடுகாட்டில் வைத்து எரித்துள்ளனர். 

இதையடுத்து தமிழழகனை காணவில்லை என தேடிவந்த காவல்துறையினர், அவரது நண்பரான ‘காக்கா’ கார்த்திக்கை பிடித்து விசாரித்துள்ளனர். அவர் அளித்த வாக்கு மூலத்தின் படி உண்மைகள் தெரியவந்துள்ளன. இதையடுத்து ‘காக்கா’ கார்த்தி கைது செய்யப்பட்டார். மேலும், தப்பியோடிய ஆட்டோ ஜெகன் மற்றும் மணிகண்டனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.