குட்கா முறைகேடு புகார் தொடர்பான வருமான வரித்துறையின் ரகசிய குறிப்பு வழங்கவில்லை என அரசு தரப்பு கூறி வரும் நிலையில், ரகசிய குறிப்பு அரசுக்கு அனுப்பப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2016 ஆம் ஆண்டு குட்கா முறைகேட்டில் லஞ்சம் பெற்றவர்கள் தொடர்பாக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு வருமான வரித்துறை ரகசிய குறிப்பு அனுப்பியதாக கூறியது. ஆனால் அரசு தரப்போ அப்படி எந்த கடிதமும் தங்களிடம் வழங்கப்படவில்லை என தெரிவித்து வருகிறது. இந்த சூழலில், அப்போதைய புலனாய்வு பிரிவு முதன்மை இயக்குநர் பாலகிருஷ்ணன், தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதாகவும், அந்தக்கடிதத்தில் ''லஞ்சப் புகார் தொடர்பாக நேற்று அனுப்பிய கடிதம்'' என சுட்டிக்காட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாலகிருஷ்ணன் அனுப்பிய கடிதம் கிடைத்ததாக 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி தலைமை செயலாளர் அலுவலகமும் ஒப்புகை அளித்துள்ளது.
அதே போல 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி அனுப்பப்பட்ட ரகசிய குறிப்பு கிடைக்கப்பெற்றதென டிஜிபி அலுவலகமும் ஒப்புகை அளித்துள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஆகஸ்ட் 13ஆம் தேதி அப்போதைய தலைமை செயலாளர் ராம் மோகன ராவுக்கு வருமான வரித்துறை எழுதிய கடிதத்தில், ''சோதனைக்கு செல்வதற்கு முன்பே சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் காவல்துறையினர் சிலர் தகவல்களை கசிய விடுகின்றனர்'' என்ற புகார் கூறியதாகவும் கூறப்படுகிறது.
ரகசிய குறிப்பை தங்களிடம் யாரும் வழங்கவில்லை என்று அரசு தரப்பு கூறிவரும் நிலையில் வழங்கியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் குட்கா விவகாரத்தில் பல சந்தேகங்கள் எழுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.