தமிழ்நாடு

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?

kaleelrahman

மதுரையில் 170 கிலோ கஞ்சா கடத்திய ஒரே குடும்பத்தின் ரூ.5.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தென்மண்டல ஜிஜியாக அஸ்ராகார்க் பொறுப்பேற்ற நிலையில் மதுரை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை விற்பனையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் ;குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுடைய சட்டவிரோத செயல்களை தடுக்கும் விதமாக மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த கஞ்சா விற்பனை குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதன் தொடர் நடவடிக்கையாக முதன் முறையாக மதுரையில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஒரே குடும்பத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கியுள்ளது காவல்துறை.

அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதியன்று மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் இரு வீடுகளில் 90 பொட்டலங்களாக கட்டி வைக்கப்பட்டிருந்த 170 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து கஞ்சா விற்பனை மற்றும் பதுக்கலில் ஈடுபட்ட மதுரை காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்த காளை மற்றும் அவரது மனைவி பெருமாயி மற்றும் காளப்பன்பட்டியைச் சேர்ந்த அய்யர் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மீது 15-க்கும் மேற்பட்ட கஞ்சா விற்பனை வழக்குகளும் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் போதை பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கஞ்சா விற்கும் தொழில் செய்து அதில் ஈட்டிய பணத்தையும், அதன் மூலம் வாங்கப்பட்ட சொத்துகளையும் அவரது உறவினர்கள் பெயரில் ஈட்டிய சொத்துக்களையும் பறிமுதல் செய்யலாம் என்ற அடிப்படையில் மூவரின் சொத்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களின் உறவினர்களின் வீடுகளிலும் சோதனை செய்யப்பட்டது

இதனைத் தொடர்ந்து சொத்து விபரங்கள் கணக்கில் எடுக்கப்பட்டு குற்றவாளிகள் மூன்று பேருக்கும் சொந்தமான மதுரை மாநகர் காமராஜர் சாலை பகுதியில் உள்ள 8 வீட்டுமனைகள், மேலூர் சூரக்குண்டு பகுதியில் உள்ள பல ஏக்கர் மதிப்பிலான விவசாய நிலங்கள், கம்மாளப்பட்டி, காளப்பான்பட்டியில் உள்ள வீடு என மொத்தம் 19 அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என சுமார் 5.5 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கம் செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர், மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும், தொடர்ச்சியாக கஞ்சா விற்பனையில. ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் கஞ்சா தொழில் மூலம் வாங்கிய சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் அனைத்தும் சட்டப்படி முடக்கம் செய்யப்படும்.

கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள், கஞ்சா வியாபாரிகள் அவர்களது உறவினர்கள் அண்ணன், தம்பிகள், மனைவி உள்ளிட்டோர் பெயரில் வாங்கும் சொத்துக்கள் குறித்து மாவட்ட காவல்துறை விசாரணை செய்வதோடு, அவற்றை சட்ட ரீதியாக முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.