கும்பகோணம் ரயில் நிலையத்தில் முதியவர்களுக்கு இலவச பேட்டரி கார் சேவை துவங்கப்பட்டுள்ளது.
கோயில் நகரமான கும்பகோணத்தை சுற்றியுள்ள நவக்கிரகங்களுக்கும், கோயில்களுக்கும் தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக சனி ஞாயிறு தினங்களில் அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபடுவார்கள். அவ்வாறு வருபவர்களில் பலர் முதியவர்களாக இருப்பதுண்டு.
ரயில்களில் வந்து இறங்கும் பொழுதும் ரயில்களில் சென்று ஏறும்போதும், முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வெளியில் செல்ல சிரமத்துக்கு உள்ளாகும் நிலை கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்துவந்து. இந்நிலையில் மக்களின் அவதியை போக்கும்வண்ணம், அனைவருக்கும் இலவச பேட்டரி கார் சேவை இன்று துவக்கப்பட்டுள்ளது.
இந்த பேட்டரி காரில் ஓட்டுனர் உட்பட 4 பேர் அமர்ந்து செல்லலாம். முதியோர்களின் வசதிக்காக தனியார் நிறுவனமொன்று, சுமார் 4 லட்ச ரூபாயில் இந்த பேட்டரி காரை இலவசமாக ரயில் நிலையத்திற்கு வழங்கியுள்ளது. இந்த பேட்டரி காரை இயக்குவதற்கு, மூன்று ஓட்டுநர்கள் ஷிப்டு முறையில் வேலை செய்வார்கள் என்றும், அதற்கான தொகையையும் கார் வாங்கித் தந்த தங்களின் நிறுவனமே ஏற்குமென்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த இலவச பேட்டரி கார் சேவை துவக்கத்தை, பக்தர்கள் மற்றும் ரயில் பயணிகள் பலரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.