லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு போலி விசா மூலம் ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி மோசடி செய்தவர் மீது புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட கீழத்தூவல், மேலத்தூவல், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலரிடம் லண்டன், சீனா, துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வேலை வாங்கித்தருவதாகக்கூறி, பரமக்குடியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார். ஆனால் ராமமூர்த்தி பணம் வாங்கியவர்களிடம் பேசியபடி வேலை வாங்கித்தரவில்லை என்று தெரிகிறது. அதிக நெருக்கடி கொடுத்த சிலருக்கு மட்டும் சுற்றுலா மற்றும் போலி விசாவில் வெளிநாட்டுக்கு அனுப்பிய ராமமூர்த்தி, அத்துடன் அவர்களை கைவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பல இன்னல்களுக்குப் பிறகு நாடு திரும்பிய இளைஞர்களும் சிலரும் பணம் கொடுத்தும் வெளிநாட்டுக்கு அனுப்பாத இளைஞர்கள் சிலரும் ராமமூர்த்தியிடம் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். அவர்களை ராமமூர்த்தி மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.