தமிழ்நாடு

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாககூறி ஒரு கோடி மோசடி

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாககூறி ஒரு கோடி மோசடி

webteam

காஞ்சிபுரத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி ஒருகோடி ரூபாய் வரை மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். 

காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவஸ்ரீபெருமாள்- மகா தமபதியினர். சிவஸ்ரீபெருமாள் ஜெராக்ஸ் கடை, ஆன்லைன் வேலைகள் மற்றும் அச்சுத்துறை சம்மந்தமான கடை வைத்திருந்தார். இவர் கஜானா ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த டீக்கடை வைத்திருக்கும் அசோக்குமார் என்பவரிடம் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக அளவில் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி, 2010 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை  பல்வேறு சமயங்களில் 42 லட்சம் வரை வாங்கியுள்ளார். மேலும் தங்க நகையாக 30 சவரன் நகை வரை வாங்கியுள்ளார். 

பணத்தை இழந்த அசோக்குமாரின் மனைவி ஆசிரியை என்பதால் அடிக்கடி பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக சிவஸ்ரீபெருமாள் பணத்தை வாங்கி வந்துள்ளார். இவ்வாறு வாங்கிய பணத்தில் சிவஸ்ரீபெருமாள் வீடு, ஆடம்பர கார் என வாங்கியுள்ளார். பணத்தை அசோக்குமார் திருப்பிக் கேட்டபோது மறுபடியும் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் பணத்தைத் தர வற்புறுத்தியபோது, எனக்கு பெரிய இடமெல்லாம் தெரியும், என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று மிரட்டியுள்ளார்.   

இதனால் அதிர்ச்சி அடைந்த அசோக்குமார் கடந்த 12ஆம் தேதி விஷ்ணுகாஞ்சி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து விஷ்ணுகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவந்தனர். தன்மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்த சிவஸ்ரீபெருமாள் உடனடியாக தன்பெயரில் இருந்த வீட்டை தன்னுடைய அண்ணன் பெயரிலும், காரை தனது மனைவி பெயர்களையும் பதிவு செய்திருந்தார். இதனால் அவர் மோசடி செய்த தொகையை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மோசடி செய்தவர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.