தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் வெங்கடாசலம். இவர் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்தபோது, அவர் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை லஞ்சமாக வசூல் செய்ததாகவும் அவர்மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அவரது வீட்டிலிருந்து 8 கிலோ தங்கம், 10 கிலோ சந்தனப் பொருட்கள், ரூ.13.5 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டிருந்தன.
தொடர்புடைய செய்தி: மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் வெங்கடாசலம் வீட்டில் மேலும் 3 கிலோ தங்கம் பறிமுதல்
ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ் அதிகாரியான வெங்கடாசலம், மாநில வனத்துறை சேவை அதிகாரியாக 1988ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். பணிமூப்பு அடிப்படையில் 1994 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றுள்ளார். தொடர்ந்து மாநில வனத்துறையில் பல்வேறு படிநிலைகளில் தமிழகம் முழுவதும் பணியாற்றியுள்ளார். கடந்து 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றுள்ளார். இவர் 2013 - 2014 ம் ஆண்டில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலராக பதவி வகித்துள்ளார். பின் மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலராக 2017 முதல் 2018 ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு செப்டம்பர் மாதம் 2019-ம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகாலம் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். இந்த பதவிகளை வகித்த காலங்களில், வெங்கடாசலம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.