தமிழ்நாடு

``பிரதமர் மோடி தமிழகத்தை கொஞ்சம் கவனிக்க வேண்டும்” - செல்லூர் ராஜு பேட்டி

``பிரதமர் மோடி தமிழகத்தை கொஞ்சம் கவனிக்க வேண்டும்” - செல்லூர் ராஜு பேட்டி

webteam

“குஜராத் தமிழர்கள் மோடிக்கு வாகளித்த பிரதிபலிப்பு எல்லா இடங்களில் இருக்குமா எனத்தெரியவில்லை” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர், பொதுமக்கள், பெண்கள், உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் திமுகவுக்கு எதிராகவும், முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், “திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் மிகவும் வேதனைப்படுகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் விதவிதமான நோய்கள் வர தொடங்கி விட்டன. மேலும் திமுகவினரும் பல்வேறு பிரச்சனைகளை மக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

விடியல் ஆட்சி என்று சொல்லி தற்போது தமிழக மக்கள் எப்போது விடியல் வரும் என்று காத்துக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது எல்லாத் துறைகளிலும் சம்பாதிக்க தொடங்கிவிட்டனர். எங்கு பார்த்தாலும் கமிஷன் - கரப்ஷன் என்று தான் உள்ளது.

அமைச்சர்கள் முதல் திமுகவினர் வரை எல்லோரும் தற்போது தைரியமாக சம்பாதிக்க தொடங்கி விட்டனர். கூட்டத்தில் மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதைப் போல மக்களிடம் வாக்குறுதி எனும் அல்வா கொடுத்து ஆட்சியை திமுக பெற்றுவிட்டது. பிரதமர் மோடி தமிழகத்தை கொஞ்சம் கவனிக்க வேண்டும், தமிழகத்தில் நடைபெறும் ஊழல்கள் பற்றி பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

எந்தத் திட்டத்தையும் திமுக நிறைவேற்றவில்லை. உதாரணத்துக்கு பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று சொல்லி வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது வரை கொடுக்கவில்லை. அதிமுகவின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்து அதை நாங்கள்தான் கொண்டு வந்தோம் எனக்கூரி முதல்வர் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்” என பேசினார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை. எங்கு பார்த்தாலும் போதை ஆறு தான் ஓடுகிறது. ஒரு காலத்தில் பெரியவர்கள் மட்டுமே மது குடித்த நிலையில் தற்போது பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் மது குடிக்கின்றனர். பள்ளிகளுக்கு முன்பாக போதைப் பொருட்கள் தாராளமாக விற்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். ஒரு பக்கம் துர்கா ஸ்டாலின், ஒரு பக்கம் உதயநிதி ஸ்டாலின், இன்னொரு பக்கம் மருமகன் சபரீசன் இவர்களுக்காகத்தான் இந்த ஆட்சி நடைபெற்று கொண்டுள்ளது” என்றார்.

வழக்குகளால் சின்னம் முடங்கும் அபாயம் உள்ளதே? 

அதிமுக நிச்சயமாக இரட்டை இலை சின்னத்தை பெற்று தேர்தலில் வெற்றி பெறும். வழக்குகளைப் பற்றி எனக்குத் தெரியாது. அது குறித்து நான் பேசவும் முடியாது.

குஜராத்தில் பாஜக வெற்றி பற்றி?

பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை பாராட்டியும், நம்முடைய தமிழ் கலாச்சாரத்தை உலகெங்கும் பிரதமர் கொண்டு செல்கிறார் என்பதை குஜராத்தில் உள்ள தமிழர்கள் அறிந்து ஒட்டுமொத்தமாக குஜராத்தில் உள்ள தமிழர்கள் மோடிக்கு வாக்கு செலுத்தியுள்ளனர். அந்த பிரதிபலிப்பு எல்லா இடங்களில் இருக்குமா என தெரியவில்லை. கூட்டணி அமைவதை வைத்து தான் சொல்ல முடியும். இன்று வளர்ந்து வருகிற பாஜக அதிமுகவுடன் இணைந்தால் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். அது அவர்களின் கையில் தான் உள்ளது.

ஒபிஎஸ் அணியினர் திமுக செல்கிறார்களே?

படி தாண்டிய பத்தினியாக கோவை செல்வராஜ் உள்ளார். அவர் எத்தனையோ கட்சிகளுக்கு தாவி விட்டார் ” என பேசினார்.