செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரையில் அதிமுக வார்டு உறுப்பினர்கள் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பான கோரிக்கை மனுவை, அதிமுக மாமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமாரை சந்தித்து வழங்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்...
“மதுரையில் அம்ரூத் குடிநீர் திட்டம் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் புயல் வேகத்தில் நடைபெற்ற பணிகள் தற்போது மிக தொய்வாக நடைபெறுகின்றன. 2021-ஆம் ஆண்டு முடிவுற வேண்டிய குடிநீர் திட்டம் தற்போது வரை நிறைவு பெறவில்லை.
குடிநீர், சாலை, பாதாள சாக்கடை பணிகள் விரைவில் முடிக்கப்படும் என ஆணையாளர் உறுதி அளித்துள்ளார், மேலும் மழைநீர் வடிகால் வாய்காலை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளோம்.
இது ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அதை யாரும் மறுக்க முடியாது. எந்த நடிகரின் திரைப்படங்கள் வெளியானாலும், ஒரே மாதிரியான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
நடிகர் விஜய்யின் GOAT திரைப்படத்திற்கு ஏன் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை என தெரியவில்லை. திமுக அரசு அராஜக போக்கோடு கண்மூடித்தனமாக செயல்படுகிறது. முதல்வர் தமிழகத்தில் இல்லாதபோது, இப்படி செய்கிறார்கள். வெளிநாட்டில் இருந்தாலும் தமிழகத்தை கவனிப்பேன் என முதல்வர் சொல்லியுள்ளார். இதையெல்லாம் முதல்வர் கவனிக்க வேண்டும்.
ரசிகர்களை மட்டுமே வைத்து நாட்டை ஆள முடியாது. மக்கள் ஆதரவு இருந்தால்தான் நாட்டை ஆள முடியும். அது விஜய் மட்டுமில்லை. யாராக இருந்தாலும் மக்கள் ஆதரவுதான் அளவுகோல்.
இ.பி.எஸ் முதலமைச்சராக இருந்தபோது ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா சென்றார், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு Jolly Tirp சென்றதுபோல சைக்கிள், பைக், கார் ஓட்டி சுற்றி வருகிறார்.
இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரைக்கு ஒன்றும் செய்யவில்லை. மதுரை மாநகராட்சிக்கு தமிழக அரசு சிறப்பு நிதி வழங்க வேண்டும். மதுரை மாநகராட்சி மீது தமிழக அரசு பாராமுகத்துடன் நடந்து கொள்கிறது.
சு.வெங்கடேசன் கட்சிக்காரர்களை அழைத்து வந்து மாநகராட்சியில் கூட்டம் நடத்துகிறார். இதை நாங்கள் செய்தால் என்னாவது? கொஞ்சம் கொஞ்சமாக கம்யூனிஸ்ட் திமுகவாக உருமாறி வருகிறது" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.