தமிழ்நாடு

என்னிடம் ஒரு ரூபாய் கூட கறுப்பு பணம் இல்லை - கே.சி.விரமணி விளக்கம்

என்னிடம் ஒரு ரூபாய் கூட கறுப்பு பணம் இல்லை - கே.சி.விரமணி விளக்கம்

கலிலுல்லா

லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கட்டி கட்டியாக தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை எனவும், தன்னிடம் ஒரு ரூபாய் கூட கறுப்பு பணம் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, ''கடந்த சில தினங்களுக்கு முன்பாக லஞ்ச ஒழிப்பு துறையினரால் ஜோலார்பேட்டையில் உள்ள வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கணக்கில் வராத நகையோ, பணமோ எதுவும் கைப்பற்றப்படவில்லை. மொத்தமாக என்னிடம் இருந்த நகைகள் 300 சவரன் மட்டுமே. மேலும் என்னிடம் லாக்கரில் கோடி கோடியாக பணம் கைப்பற்றப்பட்டதாக கூறியது உண்மை அல்ல. மொத்தமாக 5000 ரூபாய் மட்டுமே என்னிடம் இருந்தது. அதையும் என்னிடம் திரும்ப அளித்து விட்டனர் லஞ்ச ஒழிப்புதுறையினர்.

மேலும் என்னிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக சொன்ன மணல் நான் வீடு கட்டுவதற்காக ரசீதுடன் வாங்கி வைத்துள்ளேன். எனவே அதையும் சரிபார்த்து என்னிடமே திருப்பி அளித்து விட்டனர். மேலும், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்கள் உள்ளதாக பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளது.

நான் சிறு வயது முதலே கார்களை விரும்பி வாங்கும் பழக்கம் உடையவன். என்னிடம் இருக்கும் கார்கள் அனைத்துக்கும் கணக்கு சரியாக உள்ளது. நான் சிறுவயதிலிருந்தே வியாபார குடும்பத்தைச் சார்ந்தவன். எனவே என்னிடம் ஒரு ரூபாய் கூட கணக்கில் வராத பணமோ, நிலமும் இல்லை என்பதை உங்கள் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் சமூக வலைத்தளங்களில் என்னிடம் கோடி கோடியாக பணமும் வைரம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக வரும் பொய்யான தகவல்கள் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே என்னிடம் கணக்கில் வராத எந்தவிதமான நகையோ பணமோ பொருளோ லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைப்பற்ற படவில்லை என்பதை உங்கள் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.