தமிழ்நாடு

``இபிஎஸ்-தான் அதிமுக தலைமையை ஏற்க வேண்டும்”- காரணத்தை விளக்கிய முன்னாள் அமைச்சர் காமராஜ்

``இபிஎஸ்-தான் அதிமுக தலைமையை ஏற்க வேண்டும்”- காரணத்தை விளக்கிய முன்னாள் அமைச்சர் காமராஜ்

webteam

“அதிமுக என்பது தொடர்வண்டி போல. அது யாருக்காகவும் நிற்காது. ஓடிக்கொண்டே இருக்கும்” என தஞ்சை பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளர் வைகைச் செல்வன் பேசினார்.

தஞ்சையில் அதிமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக அதிமுக தலைமை கழக பேச்சாளர் வைகைச் செல்வன் கலந்து கொண்டார். 

அப்போது கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசும்போது, “அதிமுக-வுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஏன் தலைமை ஏற்க வேண்டும் என்றால் அவர் ஜனநாயக முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கட்சியில் 98 சதவீதம் பேர் எடப்பாடியை ஆதரிக்கின்றனர். அதிமுகவை தலைமை ஏற்பவர்கள் திமுகவை எதிர்ப்பவராக இருக்க வேண்டும். அப்படி திமுகவை எதிர்ப்பவர் எடப்பாடி மட்டும்தான், அவர்தான் அதிமுக தலைமையை ஏற்க வேண்டும்” என பேசினார்.

இதைத் தொடர்ந்து அதிமுக தலைமை கழக பேச்சாளர் வைகைச் செல்வன் பேசினார். அவர் பேசுகையில், “அதிமுக என்பது ரயில் போன்றது. இதில் யார் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம். யாரும் வருவார்கள் என்பதற்காக ரயில் நிற்காது. 50 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் அதிமுக ரயில், யாரும் வரவேண்டும் என எதிர்பார்க்காது. அது தன் வழியில் ஓடிக்கொண்டே இருக்கும், ஏறுபவர்கள் ஏறிக்கொள்ளுங்கள். இறங்குபவர்கள் இறங்கி விடுங்கள். யாரும் வரவில்லை என கவலைப்படுவது கிடையாது” என்று பேசினார்.