கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் சிவராஜ் கடத்தலுக்கு காரணமாக அமைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதிமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கரூர் மாவட்ட அதிமுக ஐ.டி விங் இணை செயலாளர் சிவராஜ், கடந்த மாதம் 20ஆம் தேதி கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதனையறிந்து அதிமுகவினர் சிவராஜை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்றும், கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சிவராஜ் காயங்களுடன் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக மீட்கப்பட்டார்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திமுக பிரமுகர்கள் குமார், கேசவன் உள்ளிட்ட 3 பேர் மீது ஆள் கடத்தல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சிவராஜை, திமுக பிரமுகர்கள் தகாத வார்த்தைகளில் திட்டி தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று புகார் அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், கரூர் மாவட்டத்தில் அராஜக போக்கை கடைப்பிடித்து ஜனநாயக படுகொலையை அரசு மேற்கொண்டு வருவதாகவும், சிவராஜ் கடத்தலில் காரணமாக அமைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.