Dindigul Srinivasan file
தமிழ்நாடு

தவெகவுடன் அதிமுக கூட்டணியா? திண்டுக்கல் சீனிவாசன் பதில்

பிரிந்த அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் அதிமுக வெற்றி பெற முடியும் என்ற மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் குன்றாண்டார்கோவில் ஒன்றியம் சார்பில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்

ttv, sasikala, Ops

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்...

ஓ.பன்னீர்செல்வத்திடம் ராஜினாமா கடிதம் வாங்கியது டி.டி.வி.தினகரன்தான். சசிகலாவை முதல்வராக ஆக்குவதற்கு முயற்சி செய்ததும் டி.டிவி.தினகரன்தான். தெய்வ செயலின் காரணமாக சசிகலா சிறைக்குச் செல்ல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பழனிசாமியை சசிகலாவோ தினகரனோ முதல்வராக ஆக்கவில்லை. நாங்கள்தான் ஒன்றுகூடி முதல்வராக ஆக்கினோம். ஆனால் இந்த உண்மையை சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் மறைத்துப் பேசுகின்றனர். பிரிந்த அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் அதிமுக வெற்றி பெற முடியும் என்ற மாயத் தோற்றத்தை தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் ஏற்படுத்துகின்றனர்

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். கட்சிக்காக அவர் எதையுமே செய்யவில்லை. ஆனால், குடும்பத்தின் காரணமாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இது அந்த கட்சியில் உழைத்தவர்கள் மனதையும் மூத்த நிர்வாகிகளையும் கொந்தளிக்கச் செய்துள்ளது” என்று பேசினார்.

vijay and eps

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில்...

“அதிமுகவை ஏன் விமர்சனம் செய்யவில்லை என்று விஜய்தான் கூற வேண்டும். அதிமுகவோடு கூட்டணியா இல்லையா என்பது குறித்தும் அவர்தான் கூற வேண்டும். திராவிடம், தமிழ் தேசியம் குறித்து சீமான் விஜய் மீது வைத்த விமர்சனத்திற்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு கூறிவிட்டார். அதிமுக-விற்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.

2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன், 2026-ஆம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராவார். கூட்டணி ஆட்சி சாத்தியமா சாத்தியம் இல்லையா என்று கூற முடியாது. கூட்டணி குறித்தும் மற்றவை குறித்தும் எங்களது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு எடுப்பார்" என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.