ஆர்.எம் வீரப்பன்  PT WEB
தமிழ்நாடு

எம்.ஜி.ஆரின் விசுவாசி! பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி அரசியல் ஜாம்பவானாக உருவெடுத்த ஆர்.எம்.வீ!

முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவருடைய இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விமல் ராஜ்

அதிமுகவின் அசைக்க முடியாத ஆணிவேராக இருந்த ஆர்.எம் வீரப்பன் இன்று காலமானர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆர்.எம். வீரப்பன் தன்னுடைய 98-வது பிறந்தநாளைக் கொண்டாடிய போது, சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரடியாகச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போது, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆர்.எம். வீரப்பனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதிமுகவில் ஆர்.எம் வீரப்பன் செய்தது என்ன? இவருடைய அரசியல் பின்புலம் என்ன என்பது குறித்து முழுமையாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு?

பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்திய சிறுவன்

ஆர்.எம்.வீ. என அழைக்கப்படும் இராம. வீரப்பன் புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள வல்லத்திராக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர். ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஏழு குழந்தைகளில் கடைசியாகப் பிறந்தவர் ஆர்.எம்.வீரப்பன். சிறுவயதில் இருந்தே, நாடகம், நடிப்பில் ஈர்க்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன் தந்தையின், இறப்பு அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. 9 ஆம் வகுப்புடன் தனது, பள்ளிப்படிப்பை முடித்த ஆர்.எம் வீரப்பன் நாச்சியார்புரத்தில் உள்ள அவரது மைத்துனர் கடையில் வேலைக்காகச் சேர்ந்தார்.

ஆளுமையாக உருவெடுத்த தருணம்

தமிழகத்தில் மாபெரும் ஆளுமைகளான, பெரியார், அண்ணாவிடம் பணியாற்றும் வாய்ப்பை பெற்ற, ஆர்.எம்.வீரப்பன், 1953 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அப்போது, இவருடைய செயல்கள் எம்.ஜி.ஆரை மிகவும் கவர்ந்துள்ளது. அதே 1953 ஆம் ஆண்டு "எம்.ஜி.ஆர் நாடக மன்றம்" மற்றும் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் சினிமா நிறுவனம் ஒன்றைத் தொடங்கிய "எம்.ஜி.ஆர். இரண்டு நிறுவனத்திற்கும் ஆர்.எம்.வீரப்பனை நிர்வாக பொறுப்பாளராக நியமித்தார்.

எம்.ஜி.ஆரின் விசுவாசியாக மாறிய ஆர்.எம்.வீரப்பன்!

"எம்.ஜி.ஆரின் நிழலாக வலம் வந்த ஆர்.எம்.வீரப்பன், 1963ல் "எம்.ஜி.ஆரின் தாய் பெயரில் "சத்யா மூவிஸ்" என்ற சினிமா பட நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தார்.

அதிமுகவில் ஒரு அசைக்க முடியாத கரமாக வலம் வந்த, ஆர்.எம்.வீரப்பன் கடந்த 1977 ஆம் ஆண்டு முதல், 1986 வரை இரண்டு முறை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராக இருந்துள்ளார் ஆர்.எம்.வீரப்பன். பிறகு 1986 திருநெல்வேலி சட்டமன்ற இடைத்தேர்தலிலும்,1991 ஆம் நடைபெற்ற காங்கேயம் சட்டமன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 2 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்துள்ளார். முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ. ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றி வந்துள்ளார் ஆர்.எம்.வீரப்பன்.

எம்.ஜி. ஆரின் நிழலாக மாறிய ஆர்.எம்.வீரப்பன்

ஒருமுறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற எம்.ஜி.ஆர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, எம்.ஜி.ஆர் உயிருடன் இல்லை என்று எதிர்க்கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது, எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கிறார் எனக் கூறி அவரின் புகைப்படத்தை முதலில் வெளியிட்டார் ஆர்.எம்.வீரப்பன். பிறகு எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு புகைப்படங்களாக வெளியானது. அதிமுகவின் பக்கபலமாக நின்று தீவிரமான பிரசாரம் மேற்கொண்டு அதிமுகவை வெற்றி பெற வைத்தார் ஆர்.எம்.வீரப்பன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சமாதானம் ஆன ஆர்.எம் வீரப்பன்

1987 இல் எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு, முதல்வராகப் பொறுப்பேற்ற ஜானகி ராமச்சந்திரனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால் ஆட்சி கவிழ்ந்தது. "ஜெ"அணி, "ஜானகி அணி" என இரண்டாகப் பிரிந்தது. அப்போது ஜெயலலிதாவிற்கு ஆதரவு அதிகமாக இருந்ததால், ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா உடன் சமாதானம் செய்து கொண்டார். ஜெயலலிதாவுடன் ஆர்.எம். வீரப்பன் சமரசம் ஆனதால், அதிமுகவின் இணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அந்த பதவியை முதலாவதாகவும், கடைசியாகவும் வகித்தவர் ஆர்.எம்.வீரப்பன்.

பறிபோன அமைச்சர் பதவி

அதிகமாகத் திரைப்படங்களைத் தயாரித்துள்ள, ஆர்.எம்.வீரப்பன் "சத்யா மூவிஸ்" தயாரிப்பில் 1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "பாட்ஷா" திரைப்பட வெள்ளி விழாவில், நடிகர் ரஜினிகாந்த், வெடிகுண்டு கலாச்சாரம் குறித்தும், அப்போதைய ஆட்சியாளர்கள் குறித்தும் சில சர்ச்சைக்குரிய தெரிவித்தார். அந்த நேரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில், தமிழக உணவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த ஆர்.எம்.வீரப்பன் திடீரென அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஒருகட்டத்தில் அ.தி.மு.க.வில் இருந்தும் முழுமையாக நீக்கப்பட்டார் ஆர்.எம்.வீரப்பன்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஆர்.எம் வீரப்பன் உயிர் பிரிந்தது!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன் 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி "எம்.ஜி.ஆர். கழகம்" என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினார்.பின்னர் பல ஆண்டுகள் அரசியலில் இருந்து விலகி இருந்த ஆர்.எம்.வீரப்பன் வயது முதிர்வு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, ஆர்.எம்.வீரப்பன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய உயிரிழப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, உயிரிழந்த ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்குத் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து, திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.