தமிழ்நாடு

மதுரை காமராஜர் பல்கலை.,யில் முன்னாள் நீதிபதி தலைமையிலான குழு விசாரணை..!

மதுரை காமராஜர் பல்கலை.,யில் முன்னாள் நீதிபதி தலைமையிலான குழு விசாரணை..!

Rasus

மதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான குழுவினர் இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக செல்லத்துரை பதவி வகித்தபோது, பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளுக்கு பேராசிரியர் பணி நியமனங்கள் நடைபெற்றன. மேலும் பல்கலைக்கழகத்தின் நிர்வாக பிரிவு உள்ளிட்ட பணியிடங்களும் நிரப்பப்பட்டன. இதில் மொத்தமாக 69 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள 69 பேரின் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தகுதியற்ற பலர் பணி நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, 69 பேர் பணி நியமனம் தொடர்பாக உயர் கல்வித்துறை விசாரிக்குமாறு உத்தரவிட்டது. முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உயர்கல்வித்துறை வழிகாட்டுதலில் விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டது. 

அதன்படி விசாரணைக் குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி, உறுப்பினர்களாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராமசாமி தணிக்கையாளர் வீரபாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து முன்னாள் நீதிபதி அக்பர் அலி தலைமையில் விசாரணை குழுவினர் காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த விசாரணைக் குழுவினர் முதல் கட்டமாக 69 பேர் பணி நியமனம் தொடர்பான ஆவணங்கள், பல்கலைக்கழகத்தில் வேலைக்காக வந்திருந்த விண்ணப்பங்கள் அவர்களிடம் நடத்தப்பட்ட நேர்முக ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் அடுத்த கட்ட விசாரணை நடக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.