தமிழ்நாடு

ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பாமிங் செய்தது யார்?-முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி பரபரப்பு பதில்

ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பாமிங் செய்தது யார்?-முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி பரபரப்பு பதில்

PT

“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மக்கள் அதிகம் பேசி வந்ததால், இதில் என்ன உள்ளது என்பதை தெரிந்துகொள்ளத்தான் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்று வழக்குக்குள் உள்ளே வந்தேன்” என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள பகடுப்பட்டு கிராமத்தை சேர்ந்த மறைந்த ஆர்.பி.எஃப். உதவி ஆய்வாளர் கோவிந்தராஜின் திருவுருவச் சிலை மற்றும் கல்வெட்டை அவரது குடும்பத்தார், அவர்களது குடியிருப்பு வளாகத்தில் அமைத்துள்ளனர். இந்த சிலை மற்றும் கல்வெட்டை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்த விசாரணை ஆணையத் தலைவருமான ஆறுமுகசாமி திறந்து வைத்தார்.

அதன்பின்னர் வழக்கறிஞர் தமிழ்மணி, ஜெயலலிதாவின் மரணம் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியதற்கு, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்ததாவது, “நான் அறிக்கை கொடுத்து நான்கு மாதங்களுக்கு மேலாகிறது. முன்னாள் முதல்வர் மற்றும் ஒரு கட்சியின் தலைவரின் மரணம் என்பதால், இது போன்ற கேள்விகள் எழுகிறது. எனது அறிக்கையில் என்னால் முடிந்தது என்னவோ, கிட்டத்தட்ட எந்த சந்தேகமும் இல்லாமல் வழங்கியதால்தான் எந்தவித சர்ச்சையும் எழவில்லை. இந்த அறிக்கை குறித்து எந்தெந்த, என்னென்ன சந்தேகம் எழுந்ததோ, அதற்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன்” எனக் கூறினார்.

குறிப்பாக, ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தும் வேலையை ஒரு  மருத்துவர் செய்யவில்லை, செவிலியர் செய்யவில்லை. அவருடைய உடலை மருத்துவமனையின் அறுவை சிகிச்சை கூடத்தில் உபகரணங்களை சுத்தம் செய்யும் நபர்கள்தான் பதப்படுத்தினார்கள் என்று உங்கள் அறிக்கையில் இருக்கிறது என்று வழக்கறிஞர் தமிழ்மணி அழுத்தமாக திரும்ப கேள்வி எழுப்பினார்.

அதற்கு, "இது சென்சிட்டிவான விஷயம். இதுகுறித்து அந்த அறிக்கையில் நான் நிறைய எழுதியுள்ளேன். என்னுடைய அறிக்கையில் அவர்கள் சாட்சியம் அளித்ததை வைத்துதான் சொன்னேன். இன்னும் சொல்ல போனால் நான் எதையுமே அதிகமாக எழுதவில்லை. காரணம் இது மருத்துவம் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. நான் எனது கருத்து என எதையும் சொல்லவில்லை. நீங்கள் கூறியதில் திருத்தம் உள்ளது. அதாவது ஜெயலலிதாவை சிபிஆர் செய்தது மருத்துவரோ, செவிலியரோ இல்லை, அறுவை சிகிச்சை அறையில் பணியாற்றும் நபர்கள்தான். எம்பாமிங் செய்ய கடிதம் கொடுத்தது இன்னொருவர். அவர் யார் என நான் சொல்ல முடியாது. எய்ம்ஸ் மருத்துவ ஆணையத்தை தவிர வேறு யாருக்குமே தனியாக கருத்து சொல்ல முடியாது" என்று பதில் அளித்தார் ஆறுமுகசாமி.

மேலும் வழக்கறிஞர் தமிழ்மணி, “நீங்கள் பெரிய செல்வந்தர். சம்பளத்திற்காக இந்த வழக்கை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது எனக்கு தெரியும். இந்த வழக்கை சவாலாக ஏற்றுக்கொண்டு செய்தீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர், “ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கின் ஆணையராக விரும்பி தான் ஏற்றுக் கொண்டேன். எனக்கு விடுபட்ட அதிகாரங்களை அரசிடம் எழுதி அனுப்பி பெற்றுக் கொண்டேன். நான் இந்தளவுக்கு பிரபலமாவேன் என்று கருதவில்லை. மக்கள் இதுபற்றி அதிகம் பேசி வந்தநிலையில், இதில் என்ன உள்ளது என்பதை தெரிந்துகொள்ளதான் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்று வழக்குக்குள் உள்ளே வந்தேன். மிகவும் சாதாரணமாக தான் இந்த ஆணைய பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் சவாலாக கருதவில்லை” என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்த ஆணையம் எதுவும் செய்து விடாது என்று தடை விதிக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதிக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இவரை மாற்றி விடலாமா என்று சூழல் வந்தது. அப்பொழுதும் இவர் மீது நம்பிக்கை உள்ளது மிகசிறப்பாக இந்த வழக்கை முடித்து வைக்கின்ற திறமை உள்ளது தமிழக அரசு ஏற்றுக் கொண்டது என தெரிவித்தார்.