தமிழ்நாடு

பணம் தராததால் 15 ஆண்டு நட்பு கொலையில் முடிந்தது !

webteam

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி கடத்தி கொலையில் காவல்துறை விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சிவமூர்த்தி. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரான இவர் திருப்பூர் கருமாரம்பாளையத்தில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 25-ம் தேதி கோவை செல்வதாக கூறிவிட்டு தனது காரில் சென்ற சிவமூர்த்தி வீடு திரும்பாத நிலையில் அவரது மனைவி திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிவமூர்த்தியின் செல்போன் அனைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. ஆனால் அவர் எங்கே என்பது பற்றிய எந்த விவரங்களும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கிளி என்னுமிடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே ரோந்து சென்ற காவல்துறையினரை கண்டதும் கார் அருகே நின்று கொண்டிருந்த 3 பேர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் விரட்டி பிடித்தனர்.

பிடிபட்டவர்கள் திருப்பூரைச் சேர்ந்த விமல், கவுதமன் மற்றும் மணிபாரதி என்பதும், சிவமூர்த்தியை கடத்தி கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறையினர் கூறினர்.  பிடிபட்டவர்களில் ஒருவரான விமல், சிவமூர்த்தியின் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விமலின் நண்பரான திருப்பூரைச் சேர்ந்த மூர்த்தியின் மனைவி சிவமூர்த்தி நடத்தி வரும் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், அவருக்கும் சிவமூர்த்திக்கும் தகாத உறவு இருந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி தனது நண்பர்களான விமல், கவுதமன் மற்றும் மணிபாரதியின் உதவியுடன் திட்டமிட்டு சிவமூர்த்தியை கொலை செய்ததாக தெரிவித்தனர்.

வங்கியில் இருந்து 3 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி கடந்த 25-ம் தேதி கோவைக்கு சிவமூர்த்தியை அவரது காரிலேயே விமல் அழைத்து சென்றதாகவும் மேட்டுப்பாளையத்தில் வைத்து சிவமூர்த்தியின் முகம் முழுவதும் டேப் ஒட்டியும், அவரது கழுத்தை கயிறால் நெரித்தும் விமல் உள்ளிட்டோர் கொலை செய்ததாக ஆம்பூர் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் திருப்பூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு உண்மைகளை இந்தக் கும்பல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் தெரிவித்தாவது, இந்தக் கொலை சம்பவத்தில் கைதான விமல் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு ஆர்டர் பெற்றுக்கொடுக்கும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். இதன்மூலம் சிவமூர்த்திக்கு விமல் அறிமுகமாகியுள்ளார். கடந்த 15ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் இருவருக்குமிடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த சில வருடங்களாக விமலின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமல் கடனில் சிக்கித் தவித்துள்ளார். நண்பர் என்ற முறையில் சிவமூர்த்தியிடம் தனக்கு உதவுமாறு விமல் கேட்டுள்ளார்.ஆனால் சிவமூர்த்தி பணம் தர மறுத்துள்ளார். 

சிவமூர்த்தியை கடத்தி அவரிடம் இருந்து பணம் பறிக்க விமல் திட்டம் தீட்டியுள்ளார். கோத்தகரிக்கு சுற்றுலா செல்லலாம் என சிவமூர்த்தியிடம் விமல் தெரிவித்துள்ளார். இவரது பேச்சை நம்பி சிவமூர்த்தியும் 25ஆம் தேதி வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்து விட்டு புறப்பட்டுள்ளார். விமலின் கூட்டாளிகள் மூவரும் இவர்களுடன் பயணித்துள்ளார். நீலகிரி செல்லும் வழியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சிவமூர்த்தியை இந்தக்கும்பல் தாக்கியுள்ளனர். இவர்களிடம் இருந்து தப்பிக்க சிவமூர்த்தி சத்தம் போட்டுள்ளார் இதனையடுத்து அவரது முகம் முழுவதும் அட்டைப்பெட்டிகளை ஓட்ட பயன்படுத்தும்  டேப்பால் ஒட்டியுள்ளனர். இதில் மூச்சு திணறி சிறிது நேரத்தில் சிவமூர்த்தி உயிரிழந்துள்ளார். பணம் பறிக்க  தீட்டிய திட்டம் தோல்வியில் முடிந்ததும் சிவமூர்த்தி மரணமும் இவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது

சிவமூர்த்தியை கொலை செய்த கும்பலுக்கு அவரது உடலை எங்கு வீசுவது என்று தெரியவில்லை. இதனால் சிவமூர்த்தியின் உடலுடன் அவரது காரிலேயே மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளனர். சென்னை கூவம் ஆற்றில் சிவமூர்த்தியின் உடலை வீசும் திட்டத்துடன் மூவரும் சென்னை வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வாறு செய்ய முடியாததால் சடலத்துடன் பெங்களூரு சென்றுள்ளனர். 2 நாட்கள் சடலத்துடன் சுற்றியவர்கள் இறுதியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் சிவமூர்த்தியின் உடலில் மைல் கல் ஒன்றை கட்டி வீசியதாக விசாரனையில் தெரிவித்துள்ளனர். 

3 பேரையும் கெலவரப்பள்ளி அணைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அங்கு சிவமூர்த்தியின் உடலை வீசிய இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினர். அந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சிவமூர்த்தியின் உடல் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக விமல், கவுதமன் மற்றும் மணிபாரதியை கைது செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள மூர்த்தியை தேடி வருகின்றனர்.